பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரையுடன் விருந்து : 150 பேர் கைது..

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், அனுமதி இன்றி இயங்கிய ரிசார்ட்டில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி சேத்துமடையில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான அக்ரி நெஸ்ட் என்ற ரிசார்ட் உள்ளது.

அந்த ரிசார்ட்டில் மது விருந்து கொண்டாட்டம் நடைபெற உள்ளதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த சிலர் சமூக வலைதளம் மூலம் ஆட்களைச் சேர்த்துள்ளனர்.

அதன்படி ஏராளமானோர் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யவே, நேற்றிரவு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

சொகுசு கார்கள், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், மருந்துகளை அவர்கள் உட்கொண்டதாகவும், போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

தாங்க முடியாத அளவுக்கு அட்டூழியம் செய்ததால், கோவை காவல் கண்காணிப்பாளர்களுக்கு புகார் சென்றது.

இதை அடுத்து ஆனைமலை போலீசாருடன் அங்கு சென்ற காவல் கண்காணிப்பாளர், அனைவரையும் கைது செய்யும்படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர், கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பயிலும் கேரள மாணவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனியார் திருமண மண்டபத்தில் தற்போது 150 பேரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

விருந்துக்கு ஏற்பாடு செய்தோர் மற்றும் ரிசார்ட்டின் உரிமையாளர் கணேஷ் என மேலும் 6 பேரைக் கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.