பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றிய புதிய அரசாணையை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழ்நாடு அரசின் அரசாணையை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதியதாக அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் எஸ் எஸ் சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது..

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என சட்டமும் உச்ச நீதிமன்ற உத்தரவும் உள்ளதாக வாதிட்டார்.

ஆனால், பொள்ளாச்சி விவகாரத்தில் இது முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழ்நாடு அரசின் அரசாணையிலும் கூட பாதிக்கப்பட்டவர் தொடர்பான அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, பொள்ளாச்சி விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருவதாக தெரிவித்த நீதிபதிகள்,

விதிகளும் உத்தரவுகளும் இருந்தும், துணிச்சலாக முன்வந்து புகார் அளித்த அந்தப் பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

இவ்வாறு செய்தால் இது தொடர்பாக புகார் அளிக்க யார் முன்வருவர்? என்றும் நீதிபதிகள் வினவினர்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோ பல லட்சக்கணக்கானோரால் பகிரப்படுவது சமூக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தவறு செய்ய தூண்டும் என்றும் மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்திருப்பதாக நீதிபதிகள் கூறினர்.

பல குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு போதிய அன்பும் அக்கறையும் காட்டப்படாததே இது போன்ற சிக்கல்களில் அவர்கள் எளிதாக சிக்க காரணம் ஆவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழ்நாடு அரசின் அரசாணையை திரும்பப் பெற்று பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

விதிகளையும் சட்டங்களையும் அறிந்தும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதால் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : குஷ்பு..

Recent Posts