பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க செயினை சிலர் கொள்ளையடித்ததாக கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 24ஆம் தேதி புகார் அளித்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் அட்டூழியங்கள் தொடர்பான இரு வழக்குகளை, சி.பி.சி.ஐ.டி.யிடமிருந்து சிபிஐ-க்கு மாற்ற அரசுக்கு டிஜிபி பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், இண்டர்நெட், ஐபி முகவரிகள் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகள், ஃபேஸ்புக் சேவை வழங்குபவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுடனான தகவல் தொடர்புகள் போன்றவற்றை தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தின் தன்மை மிகவும் தீவிரமானதாக இருப்பதால் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், தொழில்நுட்ப அறிவுடன் அர்ப்பணிப்பு மற்றும் ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிபி-யின் பரிந்துரையை தமிழக அரசு கவனமாக ஆய்வு செய்து, பொள்ளாச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றும் அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வழக்குகள் தொடர்பான விசாரணையை தமிழகத்தில் மேற்கொள்ள சிபிஐ-க்கு தேவையான அதிகாரங்களை வழங்கி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.