அரங்கேறும் அரசியல் கூத்து : ஒரே நேரத்தில் திமுக – அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை..

அதிமுக கூட்டணியில் சேர்வது குறித்து தே.மு.தி.க. மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே,

அந்த கட்சி நிர்வாகிகள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தே.மு.தி.க.விற்கு கொடுக்க தங்களிடம் சீட் இல்லை என தி.மு.க. கைவிரித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இரு நாட்களாக தேமுதிக தலைமை அலுவலகத்தில், அவசர ஆலோசனை கூட்டம், விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.

இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தேமுதிக 7 தொகுதிகளை கோரியதாகவும், அதிமுக தரப்பில் 4 தொகுதிகளை தருவதாக கூறியதாகவும், தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, தேமுதிக துணைச் செயலாளர் சுதிஷ், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திப்பதற்காக,

மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள டிரைடண்ட் நட்சத்திர விடுதிக்குச் சென்றார்.

அங்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார்.

சுமார் 1 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்துக் கொண்டே இருந்தது.

முன்னதாக, வண்டலூர் புறப்படும் முன், பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,

அதிமுக கூட்டணியில் தேமுதிக உறுதியாக இணைவதாகத் தெரிவித்தார்.

அதிமுகவுடன், தேமுதிகவின் துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில்,

திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு தலைவர் துரைமுருகனை, தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்களான அனகை முருகேசனும், இளங்கோவனும், கோட்டூர்புரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின் போது, திமுக மூத்த தலைவர் ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

பேச்சுவார்த்தைக்கு பின் வெளியில் வந்த தேமுதிக நிர்வாகிகளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சொந்த விஷயமாக, துரைமுருகனை சந்திக்க வந்ததாக கூறினர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வருவது தொடர்பாக அந்த கட்சியின் நிர்வாகிகள் பேசியதாக தெரிவித்தார்.

தன்னை சந்தித்த தேமுதிக நிர்வாகிகளிடமும் கொடுக்க சீட் இல்லை என்று கூறியதாக குறிப்பிட்டார்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலக உள்ளதாக சுதீஷ் தம்மிடம் தெரிவித்ததாக துரைமுருகன் கூறினார்.

இதனிடையே, டிரைடண்ட் நட்சத்திர விடுதியில் ஒரு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடு எட்டப்படாத சூழலில்,

ஹோட்டலில் இருந்து வெளியேறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டு வேகமாக சென்றார்.

அவருடன், அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் புறப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வெளியில் வந்த தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதாகவும்,

தொகுதிகளை கேட்டுப்பெறுவதில் கவனம் செலுத்துவதால், ஓரிரு தினங்களில் கூட்டணியை உறுதி செய்வோம் என்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணியில் இணைவதையே, விஜயகாந்த் விரும்புவதாகவும் சுதிஷ் தெரிவித்தார். திமுக உடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியதை ஒப்புக்கொண்ட சுதிஷ்,

தொகுதி பங்கீடு குறித்து துரைமுருகனோடு பேசியதாக கூறினார்.

தங்களுடன் கூட்டணி அமைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில், கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி பொதுக்கூட்ட மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் படம் வைக்கப்பட்டிருந்தது..

தங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, திமுக கூட்டணி கதவையும், தேமுதிக தட்டியதால், பொதுகூட்ட மேடையிலிருந்த விஜயகாந்த் படம் உடனடியாக அகற்றப்பட்டது.