பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: ஊழியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட பள்ளி கல்வித்துறை ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் போட்டித் தேர்வு நடைபெற்றது. 1.33 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வின் முடிவுகள், கடந்த நவ.7-ஆம் தேதி வெளியாகின. தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, தேர்வு எழுதியவர்கள் புகார் செய்தனர்.

இதையடுத்து தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா, சென்னை பெருநகர காவல்துறை மத்தியக் குற்றப் பிரிவில் புகார் தெரிவித்தார். அப்புகாரின் அடிப்படையில், அந்தத் தேர்வுக்குரிய விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரித்த தில்லி நிறுவனம், தேர்வில் முறைகேடு செய்த 156 பேர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இம்முறைகேட்டில் முக்கியத் தரகராக, முகப்பேரைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் கணேசனை  போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் அடுத்தடுத்து  10 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவர்களில் சுரேஷ்பால், கணேசன், ஷேக் தாவூத் நாசர், ரகுபதி, சின்னசாமி ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளிகல்விதுறை ஊழியர் விநாயகமூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இருப்பினும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

polytechnic scam case goondas act on department employee