முக்கிய செய்திகள்

பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் ஓராண்டிற்கு நீட்டிப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதேசமயம் இன்றுடன் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெறவிருந்தார். நேற்று ரயில்வே காவல்துறை சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பொன்.மாணிக்கவேல் மேலும் ஓராண்டிற்கு சிறப்பு அதிகாரியாக நீடிப்பார் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் பிரிவு, பொன்.மாணிக்கவேல் தலைமையின் கீழ் இயங்கும்.

நிலுவையில் உள்ள வழக்குகள், புதிய வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும். எந்த அதிகாரியிடமும் விசாரணை விவரங்களை அளிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.