இன்று தொடங்கிய தமிழக சட்டப் பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது.
அந்த வகையில், இந்த புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தி வருகிறார்.
அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலை கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும்.
* கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்
* ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.
* ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’ மற்ற மாநில வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.
சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை விளங்குகிறது.
* ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்தை முதல்வர் பழனிசாமி விரைவில் தொடங்கி வைப்பார்.
* துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.