திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியான திருவாரூர், அவரது மறைவுக்குப் பின்னர் காலியானது.
தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. இதையடுத்து, திமுக சார்பில் போட்டியிட பூண்டி கலைவாணன் சார்பில் 30க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதேபோல், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருக்காகவும் பலர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதையடுத்து, இன்று வேட்பாளர்கள் நேர்காணல் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இந்த நேர்காணலை நடத்தினர்.
நேர்காணலின் முடிவில், பூண்டி கலைவாணன் திருவாரூர் தொகுதிக்கான திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பூண்டி கலைவாணன், திமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.