ஏழைகளின் அபாயக் குரல் பாஜக அரசின் காதில் விழவில்லையா? : சோனியா காந்தி..

ஏழைகளின் அபாயக் குரல் மத்தியில் ஆளும் பாஜக அரசின் காதுகளில் விழவில்லையா என சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. நடந்து செல்லும் வேதனையைப் பார்த்து

தேசத்தின் மக்கள் வேதனையும், கண்ணீரும் வடிக்கும்போது மத்திய அரசுக்கு கண்ணீரும், வேதனையும் வரவில்லையா?

கஜானாவைத் திறந்து தேவையுள்ளவர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவுங்கள் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நடக்கும் “ ஸ்பீக் அப் இந்தியா” பிரச்சாரத்துக்காக அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

”கடந்த இரு மாதங்களாக ஒட்டுமொத்த தேசமும் கரோனா லாக்டவுனால் வாழ்வாதாரத்தை இழந்து, தீவிரமான பணப் பற்றாக்குறை, நிதிப் பிரச்சினையுடன் இருக்கிறார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்கள் காலில் செருப்பு இல்லாமல் வயிற்றில் பசியுடனும், தாகத்துடனும், போக்குவரத்துக்கு வழியில்லாமலும்,

தங்கள் சொந்த மண்ணைத் தேடி ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவு சுதந்திரத்துக்குப் பின், முதல் முறையாக, நடப்பதைப் பார்க்கிறோம்.

அவர்களின் வலி, வேதனை, அழுகுரல் தேசத்து மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் கேட்கிறது. ஆனால், மத்திய அரசுக்கு மட்டும் கேட்கவில்லை.

தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் மாதத்துக்கு 7,500 ரூபாயை 6 மாதங்களுக்கு வழங்கிட வேண்டும்.

இதில் ரூ.10 ஆயிரத்தை நேரடியாக வழங்கிட வேண்டும். 200 நாட்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தை வழங்க வேண்டும். கஜானாவைத் திறந்து தேவையுள்ள மக்களுக்கு மத்திய அரசு உதவிட வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களில் பாதுகாப்பாகச் சென்று சேர இலவசமாக வாகனங்களை, ரயில் போக்குவரத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் இழந்துவிட்டன. லட்சக்கணக்கான வர்த்தகம் அடித்துச் செல்லப்பட்டது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளின் விளைச்சல்கள் விற்கப்படாமல் உள்ளன. ஒட்டுமொத்த தேசமும் துயரத்தில் இருக்கிறது. இந்தத் துயரம் அரசின் அறிவுக்கு எட்டவில்லை

கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் நாளில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், தேசத்தின் நலனில் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் மத்திய அரசிடம் தொடர்ந்து விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு வர்த்தகர்கள் ஆகியோரின் காயத்தை ஆற்றுங்கள், துயரத்தைப் போக்குங்கள் என்று வலியுறத்தி வருகின்றனர்.

ஆனால், மத்திய அரசு செவிமெடுத்து இதைக் கேட்க மறுப்பது ஏனோ எனக்குத் தெரியவில்லை”.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்