
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதனை சென்னையில் செய்தியாளர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு குறித்து மே 17ம் தேதி கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நீட் தேர்வு முடிந்ததும் பொறியியல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுளோம். குளறுபடிகள் இல்லாமல் ஆன்லைன் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொலைந்து போன சான்றிதழை திரும்பப் பெற பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.