Potra Mudiyamal Pona Mamazhai : poruppu yar?
__________________________________________________________________________________________________________
இந்த பூவுலகில் வசிக்கும் உயிர்களிலேயே மிக மோசமான குரூரமும், கொடிய தன்மையும், கயமையும், கீழ்மையும், சிறுமையும், சுயநலமும், சுரண்டலும் கொண்ட ஒரே உயிரினம் மனித இனம்தான் என்பதை, மாமழையால் நேர்ந்த பெருந்துயரும், பேரிடரும் நமக்கு உச்சந் தலையிலடித்துச் சொல்லிச் சென்றிருக்கின்றன.
வங்கியில் வரவாகும் சம்பளம், ஈஎம்ஐ, கிரெடிட் கார்டு, புதிய கார்கள், விதவிதமான செல்போன்கள் என தங்களது நுகர்வு சுகத்தைத் தவிர வேறு எந்தச் சிந்தையும் இல்லாமல் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் அடைந்து கிடந்த இன்றைய தலைமுறைக்கு, இந்தப் பெருமழையும் அதனால் ஏற்பட்டதாகக் கருதப்படும் நெருக்கடிகளும் பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கின்றன. படிப்பினையைத் தந்திருக்கிறதா என்பது இனிமேல்தான் தெரியும்.
“உங்க வீடு எத்தனாவது மாடி தம்பி” என்று கேட்டால், “அது போர்த் ப்ளோர்ல இருக்கு அங்கிள்” என்று சொல்லி விட்டு, கேட்டவர் யார் என்று கூட நின்று பார்க்க நேரமும், மனமும் இல்லாமல், நவீன வசதிகளுடன் கூடிய மின்தூக்கியில் ஏறிப் பறந்து சென்று அவர்களது கூட்டுக்குள் அடைந்து விடுவார்கள். அந்த அடுக்குமாடிக் கட்டிடம் “மண்” என்ற தளத்தின் மீதுதான் கட்டி எழுப்பப் பட்டுள்ளது என்ற யதார்த்தம் குறித்த தன்னுணர்வு கூட அவர்களுக்கு இருப்பதில்லை.
பேயாது பெய்த பெருமழையால் நாற்புறமும் வெள்ளம் சூழ்ந்து, அது அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்த போதுதான் தாங்கள் வசிக்கும் ஃப்ளாட் என்பது தரையில் இருந்து எழும்பிய கட்டடத்தில்தான் உள்ளது என்பதும், அது ஒரு காலத்தில் ஏரியாகவும், வயல்வெளியாகவும் வளம் கொழித்துக் கொண்டிருந்தது என்பதும் புத்தியில் உரைக்கிறது.
மண் குறித்த தன்னுணர்வும், விழிப்பும் இருந்திருந்தால் போற்ற வேண்டிய மாமழையை பிரளயமாகக் கருதி கதற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. மழையைத் தெய்வமாகக் கருதி வழிபட்ட மரபுவழி வந்த பிள்ளைகள் இன்று அதைப் பேரிடராகவும், பெரும் அழிவாகவும் பார்த்து அலற வேண்டிய அவலம் எப்படி ஏற்பட்டது?
குறிப்பிட்ட ஆட்சியாளர்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லி அந்தப் பொறுப்பில் இருந்து ஒவ்வொருவரும் தப்பித்துக் கொள்வது மிக எளிது. ஆனால், அது தப்பித்தலாகுமே தவிர தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள எந்த வகையிலும் உதவாது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடரை எதிர்கொள்ளும் தொழில் நுட்ப சாத்தியங்களைப் பெருக்குதல் போன்ற அறிவுரைகள் நியாயமானவையாக இருந்தாலும், அவை மட்டுமே முழுமையான தீர்வைத் தந்துவிட முடியாது.
சரி இதற்கு யார்தான் பொறுப்பு?
இவ்வளவு நாளாக பொதுவெளியில் இந்த அளவுக்கு உரத்து எழாத இந்தக் கேள்வி தற்போது எழுந்திருப்பதே இந்த அவலத்திலும் ஓர் ஆறுதல்தான்.
நமது கிராமப்புறங்களில் 70கள் வரைக்கும் ஒரு காட்சியை நம்மில் பலரும் பார்த்திருக்கிறோம்.
கோடையின் உச்சமான சித்திரை, வைகாசி (ஏப்ரல், மே) மாதங்களில் கிராமத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர் வருவதற்கான வழிகளான கால்வாய்களைத் தூர்வாரும் வேலைகளை குடிமைப் பணியாக கூடிச் செய்வார்கள். வீட்டுக்கு ஓர் ஆள் கட்டாயம் இந்தப் பணியில் பங்கேற்க வேண்டும். முதியவர்களாகவோ, ஆள் அனுப்பவோ இயலாத நிலையில் அந்தக் குடும்பம் இருந்தால், கிராமத்திற்குப் பயன் படும் வகையில் குறைந்த பட்ச நிதியாவது கொடுக்க வேண்டும். கிளை ஆறுகளில் இருந்தும், காட்டுப் பகுதிகளில் இருந்தும் நீர் நிலைகளுக்கு தண்ணீர்வரக் கூடிய நீர்வழித்தடமான கால்வாய்களை தூர்வாரி, புதர்களை அகற்றி, தண்ணீர் எளிதில் வர வழிவகுப்பதே இந்தப் பணியின் முக்கிய நோக்கம். இதேபோன்று, கிராமங்களின் நீர் நிலைகளையும் தூர்வாரிச் சீரமைப்பார்கள். இவை அனைத்தும் கோடை காலத்திற்குள்ளேயே முடிந்துவிடும். கோடைகாலத்தில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளை சில பகுதிகளில் கிராம ஊழியம் என்பார்கள். கிராமப்புற நீராதாரங்களுக்கான வழிகள் கோடைக்காலங்களில் இப்படிச் சீரமைக்கப்படும் போது, மழைக்காலங்களில் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளமாகட்டும், காடுகளில், மலைப்பாங்கான பகுதிகளில் பெருக்கெடுக்கும் மழைநீராகட்டும், மிக எளிதாக நீர்நிலைகளை வந்தடையும். இத்தகைய மரபுவழியான குடிமைச் சமூகப் பண்பாடு கடந்த நாற்பது ஆண்டுகளாக “பொய்யாய்ப் பழங்கதையாய்” மெல்லப் போய்விட்டது. 2005ம் ஆண்டுமுதல் நடைமுறைப் படுத்தப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம், ஏறத்தாழ முந்தைய கிராம ஊழியப் பணியின் மற்றொரு வடிவம்தான். ஆனால் அதில் அரசு இயந்திரத்தின் தலையீடு ஏற்பட்டதால், அதனோடு ஒட்டிப் பிறந்த ஊழலும், சுரண்டலும் புகுந்து அதனை முழுமையடையாமல் செய்துவிட்டன, தற்போது பாரதிய ஜனதா அரசின் “பரந்து விரிந்த” நோக்கத்தின் காரணமாக அந்தத் திட்டமே நசுக்கப்பட்டு விட்டது.
கிராமப்புறங்களுக்கு சிமெண்ட் சாலைகள் வந்து விட்டன. பேருந்துகள், சிற்றுந்துகள் என போக்குவரத்து வசதியும் கூடக் கிடைத்து வருகிறது. விறகு அடுப்புக்குப் பதிலாக சமையல் எரிவாயு கிடைக்கிறது. நகரங்களைப் போலவே தெருவில் போவோர் வருவோர் அமர்வதற்கான திண்ணைகள் அற்ற பெரிய வீடுகளைக் கட்டும் “நவீன”மும் கிராமங்களுக்குள் வந்தாகி விட்டது. ஆனால், கிராமங்களுக்கென்ற இருந்த குடிமைச் சமூகப் பண்புகள் காணாமல் போய்விட்டன. விளைவு, அங்கிருந்த மனிதர்களும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
பெரும் நிலக்கிழார்களைத் தவிர, எளிய மக்கள் வேளாண்மையை ஒரு வாழ்வாதாரமாகக் கருதி வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இயற்கையாகக் கிடைக்கும் நீராதாரங்கள் பாழ்பட்டு வருகின்றன. ஏரிகள் தூர்வாரப் படுவதற்குப் பதிலாக தூர்க்கப்படுகின்றன, நீர்வரத்துக்கான கால்வாய்கள் புதர் மண்டி இருந்த இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒருகாலத்தில் “நல்ல மழை” என்று மகிழ்ச்சியுடன் அழைக்கப்படும் யதார்த்த அளவு மழை பெய்தாலே அது பெரு வெள்ளமாகவும் பேரிடராகவும் பார்க்கப்படுகிறது.
கிராமப்புறங்களின் இத்தகைய நசிவு, ஏழை, எளிய மக்களை கிராமங்களை விட்டுத் துரத்தியது. அருகிலோ, தொலைவிலோ உள்ள பெருநகரங்களை அவர்கள் தஞ்சமடைவது தவிர்க்க இயலாத நெருக்கடியாகி விட்டது.
இத்தகைய புலம்பெயர்தல் நகரங்களில் மக்கள் நெருக்கடியை அதிகரித்தது. கூட்டம் கூடும் இடத்தில் எதையும் விற்கலாம் என்ற இழிவான மனோபாவம் தான் நமது ரத்தத்தில் ஊறியதாயிற்றே! நகரங்களைச் சுற்றியுள்ள விளை நிலங்கள் வீட்டுமனைகளாகின. இப்போதெல்லாம் வீட்டுமனையில்லை, எல்லாமே “வில்லா”க்கள்தான். சென்னை அருகே ஒரு சிறு நகரம் என்ற விளம்பரத்தோடு நீச்சல் குளம், கோவில், பூங்காக்கள், விளையாட்டு மைதானம், “சர்வதேசக் கல்வித் தரம்” மிக்க பள்ளிகள் (இவற்றில் படித்தால் குறைந்த பட்ச மனித இயல்புகளையும், அடையாளங்களையும் இழந்து விடலாம் என்பது அறிவிக்கப்படாத உத்திரவாதம்) இத்தியாதிகளோடு அந்த வில்லாக்களை அமைக்கிறார்கள். ஒரு தெருவாக, ஊராகக் கூடிவாழ்ந்த மக்கள், இப்போது வில்லாக்களில் அமைந்துள்ள கூடுகளுக்குள் வாழ்கிறார்கள். இத்தகைய வில்லாக்களில் குறைந்த பட்சம் 100 ஃப்ளாட்டுகள் (வீடுகள்) கட்டப்படுகின்றன. ராட்சத போர்கள் போடப்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் தனி. ஆக, பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களையும், அதற்குப் பாசன ஆதாரமாக இருந்து வந்த ஏரி, குளங்களையும் யாரோ ஒருசில பெரு முதலாளிகளுக்கு தாரைவார்த்துவிட்டு, அவற்றுக்குள் கூண்டுக் கிளிகளைப் போல அடைபட நம்மைத் தயார்ப்படுத்தி விட்டார்கள்.
பெருமழை, பேரிடராக மாறியதற்கு வெறும் நிர்வாகச் சீர்கேடுகள் மட்டுமே அல்ல. அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியாக நாம் செய்த இப்படியான அனைத்துத் தவறுகளும் தான். உலகமய, தாராளமய புத்தியின் மீது கட்டமைக்கப்பட்ட நவீன உளவியல், இந்தப் பூவுலகை சிறிது, சிறிதாகக் கொல்லும் கொலைகாரர்களாக மனிதர்களை மாற்றிவிட்டது. அதன் விளைவுதான் பூமியைச் செழிக்க வைக்கப் பெய்யும் மழையை, போர்க்களத்தில் பெருக்கெடுக்கும் ரத்தத்தைப் பார்ப்தைப் போல பார்த்து நம்மை அஞ்சி நடுங்க வைத்திருக்கிறது.
இவையெல்லாம் நமது அடிப்படையான கவலைகள் என்றால், வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு ஒருமாதம் ஆகப்போகும் நிலையிலும், மாநில அரசு அதற்கான உதவியை மத்திய அரசிடம் கோரவில்லை எனும் தகவல், அந்தக் கவலையை அதிர்ச்சியாக மாற்றுகிறது. இந்தத் தகவலை, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனே சொல்லி இருக்கிறார். ஆளும் அரசின் மழைவெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மட்டுமின்றி, பின்னெச்சரிக்கைகளும் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இதுதான் சாட்சி.
ஜூன் மாதம் வாக்கில் சாதாரணமாக அதிகாரிகளைக் கூட்டி, ஆலோசனை நடத்தி கழிவு நீர்க் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளைச் செய்திருந்தால், நகர்ப்புறங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தவிர்த்திருக்கலாம். நீர்நிலைகளைத் தூர்வாரியிருந்தால் கிராமப்புறங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைத்திருக்கலாம். நீராதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்தியிருந்தால் கடலூர் மாவட்டத்தில் இத்தகைய பேரழிவு ஏற்படுவதை ஓரளவேனும் தடுத்திருக்கலாம். இவையெல்லாம் மக்களைப் பற்றிய அக்கறை உள்ள அரசு இயல்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள். இதற்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை. ஆனால். அத்தகைய அரசுதான் நமக்கு வாய்க்கவில்லை.
ஒடிசாவில் புயலால் ஏற்பட்ட மிகப்பெரிய பேரிடரின் பாதிப்புகளை பாடமாக எடுத்துக் கொண்ட அம்மாநிலத்தின் முதலமைச்சர் நவீன்பட்நாயக், அதன் பின்னர் வரும் மழையைக் கூட மிகுந்த முன்னெச்சரிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகி விட்டார்.
ஆனால், நாமோ சுனாமி, தானே புயல் என பல பேரழிவுகளைச் சந்தித்தும், அவற்றில் இருந்து குறைந்த பட்சப் பாடங்களைக் கூடக் கற்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் எனக் கூறி, சில உணவுப் பொட்டலங்களையும், சிறு தொகையையும் கொடுப்பது தீர்வாகி விடாது. அவர்கள் இழந்திருப்பது குடியிருக்கும் வீடுகளையும், உயிர்வாழ்வதற்கான ஆதாரங்களையும் ஆகும். அவற்றை ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வீசப்படும் பொட்டலங்களால் மட்டும் ஈடு செய்துவிட முடியாது. முடியாட்சியானாலும், குடியாட்சி ஆனாலும் வலியவர்களின் சுயநலத்தால் எளிய மக்கள் அழிவது மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
___________________________________________________________________________________________________________