ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உழைத்திட திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

“களத்தில் ஓயாது உழைத்திடுவோம்; தலைவர் கலைஞரின் காலடியில் வெற்றியைக் காணிக்கை ஆக்கிடுவோம்!”
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிக்கை

வெற்றிக்கான களம் தயாராகி விட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களப்பணி தொடங்கி விட்டது.

2019 மக்களவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது.

இனி நமது ஒற்றை இலக்கு, மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்துகொண்டு மக்களை வதைக்கிற பாசிச – மதவெறி – ஊழல் மய ஆட்சியாளர்களை அப்புறப்படுத்துவது ஒன்றுதான். எளிமையாகச் சொல்வதென்றால்,

தமிழகம் – புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிற சட்டமன்றத் தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையாக வெற்றிபெற உழைப்பது ஒன்றே நமது இலக்கு.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகம் சந்திக்கின்ற முதல் தேர்தல் களம் என்பது அவரது உயிரனைய உடன்பிறப்புகளான உங்களுக்கு மட்டுமல்ல,

உங்களில் ஒருவனான எனக்கும் பெரும் சுமைதான். அந்த சுமையை எளிதாக சுமக்கும் ஆற்றலையும் பயிற்சியையும் நமக்கு வழங்கியவரே தலைவர் கலைஞர் அவர்கள்தானே!

ஒவ்வொரு தேர்தல் களத்திலும் அதன் சாதக – பாதகங்களை நுணுக்கமாக அறிந்தும் உணர்ந்தும் நம்மைக் களப்பணியாற்றிடச் செய்த மாபெரும் தலைவர் அவரன்றோ! எத்தகைய சூழலிலும் வெற்றிக்கனியைப் பறிப்பது எப்படி என்பதை,

தான் களம் கண்ட 13 தேர்தல்களிலும் வெற்றியன்றி வேறெதையும் காணாத ஜனநாயக சாதனையாளர் நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

அவர் அளித்த பயிற்சியை நெஞ்சத்தில் அப்படியே பதிய வைத்து, அவர் கண்ட கனவுகள் நிறைவேற களத்தில் பாடுபட்டால் முழுமையான வெற்றியை மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி அடைந்தே தீரும்.

இது தேர்தல் நேர, திடீர்க் கூட்டணி அல்ல. பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிரட்டலுக்குப் பயந்து அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. தொகுதிப் பங்கீட்டைத் தாண்டி வேறு ஏதேதோ பலன்களை எதிர்பார்த்து

பேரம்பேசி அதன்பின் அமைந்த சுயநலக் கூட்டணி அல்ல. மேலே இருந்து போடப்பட்ட உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு அமைக்கப்பட்ட கட்டாயக் கூட்டணியும் அல்ல. நீட் தேர்வுக் கொடுமை,

காவிரி நீர் உரிமை, ஒக்கி – கஜா புயல் நிவாரணம், விவசாயிகள் – தொழிலாளர்கள் – வணிகர்கள் படும் துயரம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, ஸ்டெர்லைட் – ஹைட்ரோகார்பன் திட்டங்கள் எதிர்ப்போர் மீதான அடக்குமுறை

உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜனநாயக விரோதப் போக்குகளையும் அதற்கு காரணமான மத்திய – மாநில ஆட்சியாளர்களையும் எதிர்த்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக தோழமை உணர்வுடன் இணைந்து நின்ற மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் வலிமையான கூட்டணி; இலட்சியக் கூட்டணி.

இந்த மகத்தான வெற்றிக் கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகம் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் அரசியல் இருட்டை விரட்டியடிக்கும் ஆற்றல் கொண்ட உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.

கூட்டணிக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் புதுவை உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 தொகுதிகளிலும்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி 1 தொகுதியிலும் களம் காண்கின்றன.

இவற்றில், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 தொகுதியிலும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சிப் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்திலேயே அதன் வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.

அந்த வகையில், 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் 23 தொகுதிகளில் உதயசூரியன் ஒளிர்கிறது. மற்ற தொகுதிகளில், அந்தந்த கட்சிகளின் வெற்றிச் சின்னத்தில் வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிடும் எந்த சின்னமாக இருந்தாலும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு அது உதயசூரியனாகத்தான் தெரியும்;

தெரிந்திட வேண்டும். அதனை மனதில் கொண்டு, கழகத்தின் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் களப்பணியாற்றி முழுமையான வெற்றியைக் கொண்டாடுவதே நமக்கான இலக்காகும்.

நமக்கு எதிராக நிற்கும் பாசிச சக்திக்கும் அதற்குத் துணை போகும் அடிமை மனநிலை கொண்டோருக்கும் ஜனநாயக ரீதியில் தக்க பாடம் புகட்டிடும் வகையில் நம்முடைய களப்பணி அமைந்திட வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேரடியாகக் களமிறங்கும் 20 தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயரை அறிவிக்கும்போதே அவர்கள் வெற்றி வேட்பாளர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாகிவிட்டது.

அதனை நிச்சயமாக்கித் தரவேண்டிய பொறுப்பு தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களிடம்தான் உள்ளது. கழகத்தின் சார்பில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டிய நிலையில்,

நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பில் 20 பேரைத்தான் தேர்வு செய்ய முடியும் என்பதால், அதனடிப்படையில் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வாய்ப்பைப் பெற்றவர்கள் அதற்குரிய பொறுப்பை உணர்ந்து களப்பணியாற்ற வேண்டும். வாய்ப்பைப் பெற இயலாதவர்கள் கழகத்தின் வெற்றிக்கு முழுமையாகத் துணை நின்றிட வேண்டும்.

இதுதான் ஜனநாயகம் போற்றும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு.

அந்த அறிஞரின் வார்த்தையிலேயே சொல்ல வேண்டுமென்றால், “பீரோ நிறைய ஏராளமான பட்டுப்புடவைகள் இருந்தபோதிலும் –

இன்று செல்லும் இந்தத் திருமணத்திற்கு இந்தக் கலர் பட்டுப்புடவையை எடுத்துக் கட்டிக்கொள்கிறேன் என்றால், அடுத்து இன்னொரு திருமணத்திற்குச் செல்லும்போது மற்றொரு புடவையை எடுத்துக் கட்டிக்கொள்வேன்.

இன்று இதனைக் கட்டிக்கொள்வதால் மற்றது எல்லாம் பிடிக்காது என்று அர்த்தமல்ல” என்று அவர் சுட்டிக்காட்டிய உவமையை உங்களில் ஒருவனான நான் எடுத்துக் காட்டிட விரும்புகிறேன்.

இங்கே திருமணம் என்பது தேர்தலையும் பட்டுப்புடவை என்பது கழக வேட்பாளரையும் குறிக்கும் என்பதை கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுக்கு நான் விளக்கிட வேண்டிய அவசியம் இருக்காது.

கழகத்தை குடும்பக் கட்சி என விமர்சிப்போருக்கு நாம் தரும் பதிலடி, ஆம்… இது குடும்பக்கட்சிதான் என்பதே ஆகும்.

எனவே, கழகத்தின் சார்பில் களத்தில் நிற்பவர் நம் கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நம் சகோதரர் நிற்கிறார்.

நம் சகோதரி நிற்கிறார் என்கிற அந்த பாச உணர்வுடன் களப்பணிகளை ஆற்றுங்கள். நீங்கள் ஆற்றுகின்ற களப்பணியைக் காணவும், உங்களுடன் இணைந்து நின்று வாக்குகளை சேகரிக்கவும் உங்களில் ஒருவனான நானும் ஆயத்தமாகிவிட்டேன்.

ஆம்… தலைவர் கலைஞர் அவர்களை மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த அவரது மண்ணின் மைந்தர்களாக திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து

2019 மக்களவைத் தேர்தல் – சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்தை மார்ச் 20ல் தொடங்குகிறேன். வெற்றிக்கு கட்டியம் கூறும் திருவாரூர் தொகுதியில் தொடங்குகிற பரப்புரைப் பயணம்,

40 மக்களவைத் தொகுதிகளின் வெற்றியையும், 18 தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலின் வெற்றியையும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்.

இது ஜனநாயக அறப்போர்க்களத்தில் வெற்றியைப் பெறுவதற்கான பயணம். போர்க்களத்தில் ஆயுதம் இல்லாமல் பயணிக்க முடியுமா?

அறப்போர்க்களத்தின் ஆயுதம்தான் கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை. மக்கள் நலன் காக்கும் அந்த அறிவாயுதங்களில் சிலவற்றை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.
· தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தமிழே இணை ஆட்சி மொழி.
· சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் நீட் உள்ளிட்ட தேர்வுகள் ரத்து. மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து.
· மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு.
· வேளாண்மைக்கு தனி பட்ஜெட். விவசாயிகளின் கடன் ரத்து. காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கைவிடப்பட்டு முழுமையான வேளாண் மண்டலம்.
· தேசிய ஊரகத் திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு 150 நாள் வேலை
· மத்திய அரசு வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு நிதி.
· மத்திய – மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.
· பெட்ரோல் – டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படுவதுடன், சமையல் சிலிண்டர் விலை குறைப்பு.
· 10ஆம் வகுப்பு படித்த ஒரு கோடி பேருக்கு சாலைப்பணியாளர் பதவி.
· தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு.
· கிராமப்புற பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் பணி.
· வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு 50ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன்.
· அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை.
· பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கான நடவடிக்கை
· கல்விக் கடன் ரத்து. மாணவர்களுக்கு இலவச ரயில் பயணம்.
· தமிழகத்தின் மாநகரங்களில் மெட்ரோ ரயில்.
· தமிழர் பண்பாட்டை நிலைநாட்டும் கீழடி ஆய்வுகள் தொடரும்
· இயற்கை சீற்றத்திலிருந்து கடலோர மக்களை காப்பாற்ற தனிச் சட்டம்.
· கார்ப்பரேட் நிறுவனங்களில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலை.
· மத்திய – மாநில அரசு காலியிடங்கள் நிரப்பப்படும்.
· சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்.
· அவரவர் மத நம்பிக்கைகள் பாதுகாக்கப்பட்டு – மதங்களுக்கிடையே நல்லுறவு ஏற்பட நடவடிக்கை.
· ஏழை நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.
· பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு.
தலைவர் கலைஞர் காலத்திலிருந்தே கழகத்தின் தேர்தல் அறிக்கை என்பது தேர்தல் களத்தின் போக்கைத் தீர்மானிக்கும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் விளங்கும்.

இப்போதும் அப்படித்தான். நம்முடைய தேர்தல் அறிக்கை ஒரு போதும் வில்லனாக இருந்ததில்லை.

மக்களின் வில்லன்களை எதிர்கொள்ளக் கூடிய வலிமை கொண்ட ஆயுதமாக இருக்கும். அந்த ஆயுதத்தை வழங்கிவிட்டு, பரப்புரைப் பயணத்தை மேற்கொள்கிறேன்.
உங்களில் ஒருவனாக எத்தனையோ தேர்தல் களங்களில் பரப்புரை செய்திருக்கிறேன். உங்களை சந்தித்திருக்கிறேன்.

தலைவர் கலைஞரின் மகன் என்ற அன்புடன் நீங்கள் வரவேற்றுள்ளீர்கள். இந்த முறை தலைவர் கலைஞரின் மகன் என்பதுடன், இந்தப் பேரியக்கத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக்காத்த அந்த மாபெரும் தலைவர் ஏற்றிருந்த சுமையை

உங்களின் துணையுடன் என் தோள்களில் ஏற்றப்பட்ட நிலையில் உங்கள் அன்புமுகம் காண வருகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு அளித்த நற்சான்றிதழ், “ஸ்டாலின் என்றால் உழைப்பு… உழைப்பு… உழைப்பு…” என்ற வார்த்தைகள்தான்.

அந்த உழைப்பை உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.

உங்கள் வாக்கு உங்களால் பல வாக்கு என்ற அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்குகள் குவிந்திட வேண்டும். முழுமையான வெற்றி நிறைந்திட வேண்டும்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாற்பதுக்கு நாற்பது – பதினெட்டுக்கு பதினெட்டு என 100 விழுக்காடு வெற்றியன்றி வேறு சிந்தனைக்கு இடம்கொடுக்காமல் உழைத்திடுவீர்.

அந்த உழைப்பு தரப்போகும் மகத்தான வெற்றியை மே 23ஆம் நாள் நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞருக்குக் காணிக்கையாக்கிடுவோம்.

உங்களில் ஒருவனாகக் கேட்கிறேன். உறுதி தாருங்கள்… உத்தரவாதம் தாருங்கள்… உழைப்பைத் தாருங்கள்… முழுமையான வெற்றியைத் தாருங்கள்!
அன்புடன்
மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவர் ஆண்டு 2050, பங்குனி 5,
19-03-2019.