மாநிலக் கல்லூரிக்குள் புகுந்து மாணவியைக் கொல்ல முயற்சி..


காதலிக்க மறுத்து விலகிச் சென்ற மாணவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் கல்லூரியில் புகுந்து கொலை செய்ய முயன்ற ஜிம் பயிற்சியாளரை மாணவர்களே மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் கீதா (17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் பிளஸ் 2 முடித்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தினமும் கல்லூரிக்கு வந்து செல்லும் கீதா கல்லூரியில் என்.எஸ்.எஸ் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

இன்று மதியம் 3 மணி அளவில் என்.எஸ்.எஸ் வகுப்பு நடந்துள்ளது. கீதாவும் சக மாணவ-மாணவிகளோடு வகுப்பில் கலந்து கொண்டார். அப்போது நல்ல உடற்கட்டுடன் கல்லூரி மாணவர் போலிருந்த இளைஞர் ஒருவர் என்.எஸ்.எஸ் வகுப்பு நடக்கும் இடத்தின் அருகே வந்துள்ளார்.

அங்கு மாணவி கீதாவின் அருகில் வந்தவர், அவரைக் கொல்ல கத்தியுடன் பாய்ந்துள்ளார். இதைப் பார்த்த சக மாணவிகள் அலறியுள்ளனர். அலறல் சத்தம் கேட்ட மாணவர்கள் பாய்ந்து சென்று அந்த இளைஞரை மடக்கிப் பிடித்துக் கத்தியைப் பிடுங்கியுள்ளனர்.

என்னை ஏமாற்றப் பார்த்த உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று அந்த வாலிபர் சத்தம் போட்டுள்ளார். கல்லூரி ஆசிரியர்கள் அந்த இளைஞரின் நலன் கருதி சமாதானம் பேசியுள்ளனர். ஆனால் அவர் மாணவியைத் தாக்கும் நோக்கத்தில் இருந்ததால் போலீஸுக்கு மாணவர்கள் போன் செய்ய அண்ணா சதுக்கம் போலீஸார் விரைந்து வந்து இளைஞரைக் கைது செய்தனர்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தனது பெயர் மதன் (22) என்றும், அயனாவரம், ரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மதன் கூறுகையில், ”தானும் கீதாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்ததாகவும், கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து தன்னை சந்திப்பதையே அறவே கீதா தவிர்த்ததாகவும் காரணம் கேட்டாலும் சொல்லவில்லை, இதனால் நேரில் சந்தித்து காரணம் கேட்கலாம் என்று மூன்று நாட்கள் கல்லூரிக்கு வந்து கெஞ்சினேன். ஆனால் என்னை கீதா சட்டைசெய்யவில்லை என்றும் மதன் கூறியுள்ளார்.

காரணம் கேட்டாலும் சொல்லவில்லை, நான்கு வருடம் நன்றாகப் பழகிவிட்டு கல்லூரி சேர்ந்தவுடன் என்னை ஒதுக்கியதால் கோபம் வந்தது, இன்று காலையும் கெஞ்சினேன் ஆனால் மனம் இறங்காததால் கத்தியுடன் கல்லூரிக்குள் கொலை செய்யும் நோக்குடன் வந்தேன். என்னை மாணவர்கள் மடக்கி பிடித்து விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

மதனைக் கைது செய்த போலீஸார், அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


 

உலகக்கோப்பை கால்பந்து : உருகுவேயை வீழ்த்தி அரையிறுதியில் பிரான்ஸ்..

தங்கம், வெள்ளி விலை..

Recent Posts