நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் கரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தாமதமாக தொடங்கி, முன் கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வில்லை. இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
கரோனா பிரச்சினை, விவசாயிகள் போராட்டம் போன்றவற்றால் மத்திய அரசு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். சவால்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் இந்தியா ஒருபோதும் நின்று விடாது. பேரிடர்களை ஒற்றுமையாக கடந்து வந்திருக்கிறோம். இந்தியா ஒன்றுபட்டு நின்று மீண்டுள்ளது.
கரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு எதிரான போரில் பல உயிர்களை இழந்துள்ளோம். ஊரடங்கு காலத்தில் உணவுக்காக சிரமப்படும் நிலை யாருக்கும் ஏற்படவில்லை. லட்சக்கணக்கான கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
குடியரசுத் தலைவரின் உரையை18 கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மதிமுக, கேரள காங்கிரஸ் (எம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய 18 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்தன.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15-ம் தேதி வரை நடக்கிறது. 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதன்பிறகு இரண்டாம் அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.