
தமிழகத்திலும் செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிடடுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
‘‘மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.
கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பத்திரிக்கை, ஊடங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்கள் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.