முக்கிய செய்திகள்

பரவும் தீ… பதறும் மோடி! : செம்பரிதி

Prevailing of reservation fire : PM worried

___________________________________________________________________________________________________

 

பிரதமர் மோடி இதை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

 

modiappeal‘எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் 2017ம் ஆண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் “தாமரை” மலராது’ என்று சவால் விடுகிறான் அந்த 22 வயது இளைஞன்.

 

தனி ஒருவனாக நின்றல்ல, லட்சத்தைத் தாண்டும் படேல் சமூகத்து மக்கள் புடை சூழ நின்று அவன் இந்தச் சூளுரையை விடுக்கிறான்.

 

யார் இந்த ஹர்திக் படேல்?

 

ஒரே நாள் போராட்டத்தில் நாட்டையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைக்க இந்த இளைஞனால் எப்படி முடிந்தது?

 

மற்றவர்களை விட, சமூகநீதி என்ற சொல்லைக் கெட்ட வார்த்தையாகவும், கேலிப் பொருளாகவும் பார்ப்பவர்கள், இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 

படேல் சாதியினர், சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய அல்லது நலிவுற்ற சமூகமல்ல. சொல்லப் போனால் அதனை ஒரு ஆதிக்க சமூகம் என்றும் கூடச் சொல்லலாம். பொதுவாக படேல் சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பு என்று சராசரியான வாழ்க்கைத் தேவைகளுக்காகக் காத்திருப்பவர்கள் அல்ல. சிறு வயதிலேயே வர்த்தகங்களுக்குள் நுழைந்து விடுவார்கள். அதுவும் படேல் சமூகத்தினரில் பெரும்பான்மையானவர்கள் வைர வியாபாரம் செய்யக் கூடியவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

 

அதனால்தான் 1980, 81ம் ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து இதே படேல் சமூகத்தினர் குஜராத்தில் பெரும் போராட்டங்களை நடத்தி உள்ளனர். அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் அந்தப் போராட்டத்தைக் காட்டி சில “மேன்மக்கள்” தூபம் போடவே, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என அவர் அறிவித்தார். பின்னர் திராவிட இயக்கங்கள் (தி.க, திமுக) அதனைக் கடுமையாக எதிர்க்கவே, “ஏதோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டோம் போல…” என்று மிரண்டு போய், உடனே அதனைத் திரும்பப் பெற்றுவிட்டார்.

 

அது தமிழக அரசியலின் முரண் நகைச்சுவை நிகழ்வுகளில் ஒன்று. போகட்டும்… இப்போது “படேல்” விவகாரத்திற்கு வருவோம். இடஒதுக்கீட்டை அத்தனை மூர்க்கத்துடன் எதிர்த்த படேல் சமூகத்தினர், இப்போது அதனைத் தரக் கோரிப் போராடும் – அதுவும் இத்தனை வன்மத்துடன் போராடும் நிலை எப்படி உருவானது?

 

காலம் தந்த நெருக்கடிதான்.

 

அவர்கள் மிகுதியும் ஈடுபட்டு வந்த வைரத் தொழில் இப்போது மந்தநிலையை அடைந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 150க்கும் மேற்பட்ட வைரக்கற்களைத் தயாரிக்கும் யூனிட்டுகள் மூடப்பட்டுவிட்டன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படேல் சமூகத்தினர் வேலைவாய்ப்புகளை இழந்து தவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதே நேரத்தில் அண்மைக் காலமாக குஜராத் காவல்துறை உள்ளிட்ட அரசுப் பணிகளிலும் தங்களுக்கு உரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது இவர்களது குற்றச்சாட்டு. இதனால், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மேற்படிப்புகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என அவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

 

ஆனால், கல்வி பெறுவது என்பது வைர வியாபாரத்தை விடவும் அவர்களுக்கு பெரும் செலவு மிக்கதாக உள்ளது. பெரும்பாலும் தனியார் கல்லூரி, பல்கலைக் கழகங்களில்தான் சேர்ந்து படிக்க வேண்டிய நிலை. அரசுக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மூலம் மட்டுமே ஓரளவேனும் இடங்களைப் பெற முடியும். ஆக, இடஒதுக்கீடு என்பது அவர்களுக்கு தற்போது இன்றியமையாத தேவையாகி விட்டது. அதிலும், மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் தங்கள் சமூகத்தைச் சேர்த்தால் மட்டுமே இடம் கிடைக்க வாய்ப்பிருப்பதையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள். பெரும் பொருட் செலவு செய்து படிக்க முடியவில்லை. வேலைவாய்ப்பு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இத்தகைய வாழ்க்கை நெருக்கடிகள் தந்த கோபமும், கொந்தளிப்பும், அந்தச் சமூகத்து இளைஞர்களுக்குள் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது. அந்தக் கனலை ஊதிவிடும் வேலையை ஹர்திக் படேல் கச்சிதமாகச் செய்துவிட்டார். இப்போது பற்றியெரிகிறது.

 

யதார்த்த உண்மையின் அடித்தளத்துடன் காலத்தின் தேவையால் உருவாகும் இடஒதுக்கீடு போன்ற சமூகநீதி சார்ந்த தத்துவங்கள் எப்போதுமே பொய்த்துப் போவதில்லை என்ற உண்மையை, இந்தப் போராட்டம் மிக அழுத்தமாக மெய்ப்பித்துள்ளது.

 

சாதி, மதம், பொருளாதாரம் இப்படிப் பல்வேறு படிநிலை ஏற்றத்தாழ்வுகள் மண்டிக்கிடக்கும் ஒழுங்கற்ற ஒரு சமூகத்தில், எல்லோருக்குமான பொது நீதி ஒன்று எப்படி இருக்க முடியும்? பொதுவான வாய்ப்பும்தான் எப்படி சாத்தியமாகும்?

 

இந்தக் கேள்விகளின் விளைவாக, தந்தை பெரியாரைப் போன்ற அறிவு நேர்மை மிக்க பெரியோர் கண்டறிந்த தீர்வும், தெளிவும் தான் சமூகநீதி. சமூகநீதிக்கான விளக்கம் மிக எளியது.

 

சமூகத்தில் பிறப்பின் (சாதியின்) பெயரால் ஒடுக்கப்பட்டு, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட எளியவர்களுக்கு, அதே பிறப்பின் பெயரால் மேலான வாழ்வையும், வலிவையும் பெற்றிருக்கும் உயர்சாதிப் பிரிவினர் வழிவிட்டு உதவ வேண்டும் என்பதுதான் அந்த எளிய உண்மை.

 

ஆனால், மனித உரிமை, மனித நேயம் போன்ற கருத்துகளை அடிக்கடி உச்சரிப்பவர்களெல்லாம், சமூகநீதி சார்ந்த, இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் என்று வரும் போது, வேறு மாதிரிப் பேசுவதைப் பரவலாகப் பார்க்க முடியும். அவர்களது “மனிதநேயம்” கடைசியாகப் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்ற (Creamy layer) இடத்தில் தேங்கி நின்று விடும்.

 

ஆனால், குஜராத்தில் இப்போது இடஒதுக்கீடு கோரி வெடித்திருக்கும் போராட்டம், இது போன்ற சப்பைக்கட்டுகளையெல்லாம் அடித்து நொறுக்கி இருக்கிறது. ஹர்திக் பட்டேல் என்ற, சாதாரண கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்த இளைஞன் இட்ட தீ, குஜராத் முழுமையும் பரவி எரிகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் படிதார் அனாமத் ஆந்தோலம் சமிதி என்ற அமைப்பைத் தொடங்கிய ஹரிதிக் படேல், குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலின் போது மாநிலம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் தனக்கு ஆதரவு திரட்டி உள்ளார். உச்சக்கட்டமாக கடந்த (25.8.15) செவ்வாய்க்கிழமை மாலை அகமாதாபாத்தில் மிகப்பெரிய பேரணியை அவர் நடத்தி உள்ளார். ஆனால், வழக்கம் போல குஜராத் மாநில பாஜக அரசின் காவல்துறையினர், இந்தப் போராட்டத்தை தவறாகக் கையாண்டதாகவே தெரிகிறது. பேரணி முடிவடைந்து அனைவரும் கலைந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயமத்தமாகிக் கொண்டிருந்த போது, ஹரிதிக் படேலை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் திடீரென கொந்தளித்த படேல் சமூக இளைஞர்களை, ஒரு கட்டத்தில் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டமாகட்டும், ஜெயப் பிரகாஷ்நாராயணனின் நவநிர்மான் போராட்டமாகட்டும், வி.பி.சிங் அரசின் மண்டல் கமிஷனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததாகட்டும், 2002 மதக்கலவராமாகட்டும், குஜராத் எப்போதுமே திடீரென கொந்தளித்துப் போராட்டத்தில் ஈடுபடும் பூமியாகவே இருந்து வருகிறது. அதிலும் குஜராத் கலவரத்தின் போது மோடி அரசு நடந்து கொண்ட முறைகள் சுதந்திர இந்தியாவின் கருப்பு ஆவணமாகவே மாறி நிலைத்துவிட்டது. அத்தகைய மோசமான அணுகுமுறையையே, இந்தப் போராட்டத்தின் போதும் குஜராத் காவல்துறை கடைப்பிடித்திருப்பது தெரிகிறது. அதன் விளைவுதான் 8 பேரின் உயிர்ப்பலி.

 

தற்போது குஜராத்தின் முதலமைச்சராக இருக்கும் ஆனந்தி படேலும், இட ஒதுக்கீடு கோரிப் போராட்டம் நடத்தும் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆனாலும், தற்போது அரசியல் அதிகாரத்தை விட, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சமூக அங்கீகாரம் சார்ந்த வாய்ப்புகளை உறுதிப் படுத்துவதன் மூலமே தங்களது இனம் தலைதூக்க முடியும் என படேல் சமூக இளைஞர்கள் நம்புகிறார்கள். அதன் விளைவுதான் இந்தப் போராட்டம்.

 

மோடி சற்று ஆடித்தான் போனார்.

 

குஜராத்தைச் சேர்ந்த மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் ஆகிய இருபெரும் தலைவர்களின் படங்கள் பின்னணியில் தோன்ற, அவற்றுக்கு முன்பாக நின்று, அமைதி காக்குமாறு படேல் சமூகத்துக்கு மோடி விடுத்த வேண்டுகோள் பெரிய பலனை அளிக்கவில்லை.

 

“பசிக்கிறவன் காதுகளில் வேதாந்தம் ஓதாதே” என்று அவர்கள் பெரிதாகக் கொண்டாடும் விவேகானந்தரே கூறியிருக்கிறார். அப்படி இருக்க, அடிவயிற்றில் எரியும் பெரும் தீயை, அமைதி என்ற ஒற்றைச் சொல்லால் அணைத்துவிட முடியும் என்று மோடி நம்பினால், அது அவரது தவறுதான்.

 

படேல் சமூகத்தைத் திருப்திப்படுத்தவும், வளைத்துப் போடவும் வல்லபாய் படேலுக்கு சிலை வைக்கும் திட்டத்தையெல்லாம் மோடி அறிவித்தார். குஜராத் அரசு அதற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அத்தகைய படேல் சிலை போன்ற மோடியின் பலே அரசியல் தந்திரங்களை எல்லாம், ஹரிதிக் படேலின் தற்போதைய திடீர் எழுச்சி தவிடு பொடியாக்கி விட்டது. எழுச்சி திடீரென ஏற்பட்டிருந்தாலும், அதற்கான தத்துவ அடிப்படை வலிமையானது என்பதால், மோடியின் உரத்த குரல் மட்டுமே அதை அடக்கப் போதுமானது அல்ல.

 

_____________________________________________________________________________________________________________