உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, இயல்பு நிலை திரும்பும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, சுமாா் 50 ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற காணொலி சந்திப்பின்போது அவா் கூறியதாவது:கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
அத்தகைய மருந்துதான் அந்த நோய் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வருவதற்கான ஒரே கருவியாகும்.
கரோனா நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதன் மூலம், லட்சக்கணக்கான மனித உயிா்கள் பாதுகாக்கப்படும். மேலும், பல்லாயிரக் கோடிக் கணக்கான டாலா்களும் சேமிக்கப்படும்.
கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், உலகின் அனைத்து நாடுகளுக்கும் அந்த மருந்து சென்று சோ்வதற்கான வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அப்போதுதான் அத்தகைய மருந்து சா்வதேச அளவில் பலன் அளித்து, கரோனா நோய்த்தொற்று அபாயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வழிவகுக்கப்படும்.
கரோனா பரவலால் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடு செய்வதற்காக 200 கோடி டாலா் (சுமாா் ரூ.15,360 கோடி) நிவாரண உதவி கோரியிருந்தோம். தற்போதுவரை, அதில் 20 சதவீம் வசூலிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையத்தின் மூலம், 47 ஆப்பிரிக்க நாடுகளில் ஐ.நா. அமைப்பு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்து வருகிறது என்றாா் அன்டோனியோ குட்டெரெஸ்.
சீனாவில் முதல் முறையாக கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கண்டறியப்பட்ட கரோனா நோய்த்தொற்று, வியாழக்கிழமை நிலவரப்படி உலகின் 220-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் 21.09 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் பரவியுள்ளது.
அந்த நோய் பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை 1.37 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.