சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்தது உண்மையே : விசாரணை அறிக்கை தகவல்..

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக பல்வேறு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், சிறையில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்காண்டு சிறைத்தண்டனை பெற்றதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஷாப்பிங் பையுடன் சசிகலாவும், இளவரசியும் சிறை அறையில் இருந்து வெளியேறியதாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகின.

ஆனால் சிறைக்கு வந்த விருந்தினர்களை சந்திக்கவே சசிகலாவும் இளவரசியும் சென்றதாக விளக்கம் கூறப்பட்டது.

சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக, டிஜிபிக்கு சிறைத்துறை டிஐஜியான ரூபா அறிக்கை அனுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, சிறை விதிகள் மீறப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழுவை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

விசாரணை அறிக்கையில், சசிகலாவிற்கு சலுகை அளித்தது உண்மை என்பது தெரிய வந்துள்ளது. சிறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் தரப்பட்டதா என்பது குறித்து ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, விசாரணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சிறையின் கட்டுப்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதை இக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் சசிகலாவுக்கு முதல்தரமான வசதிகள் சிறைக்குள் செய்துத் தரப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்த பின்னரும், சிறப்பு சலுகைகளை வாபஸ்பெற சிறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

டிஐஜி ரூபாவின் புகார்களை ஆராய்ந்த வினய் குமார் குழுவினர், சசிகலாவுக்காக சிறையின் ஒரு தனிப்பகுதியே ஒதுக்கப்பட்டதைக் கண்டறிந்துள்ளனர்.

ஒவ்வொரு சிறை அறையிலும் நான்கு கைதிகள் இருக்கக் கூடிய நிலையில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு மட்டும் 5 தனி அறைகள் ஒதுக்கப்பட்டு, அந்த அறைகளில் திரைச்சீலைகளும் போடப்பட்டிருந்தன.

பூனை தொல்லையால் திரைச்சீலைகள் போடப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. சசிகலா சமைப்பதற்காக பிரஷர் குக்கர், மஞ்சள்தூள் உள்ளிட்ட பொருட்களும் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.