கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீர் எடுப்பதை தடை செய்தும், வணிகப் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று 3வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையில் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் போராட்டத்தில் இணைந்தனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததால், அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர்.
இந்த சூழலில் அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேசினார். அப்போது குழு அமைத்து நீர் எடுப்பதற்கு ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று கொள்வதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
எனவே பொதுமக்களின் சிரமம் கருதி நாங்களாகவே போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.