மன்மோகன் சிங்கை சிறுமைப்படுத்தும் பாஜக: பிரியங்கா காட்டம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சிறுமைப் படுத்துவதற்காக,, வர்த்தக ரீதியான ஒரு திரைப்படத்திற்கு பாஜக விளம்பரம் செய்து வருவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங் பாத்திரத்தில் நடித்த “தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்” என்ற திரைப்படம் ஜனவரி 11ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் உண்மைக்கு மாறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சோனியா காந்தி மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான ப்ரியங்கா காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

உயர் பதவிகளில் இருந்த போது, இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து ஒரு போதும் தவறாத மனிதரை சிறுமைப் படுத்தும்  நோக்கத்துடன், வர்த்தக ரீதியான ஒரு திரைப்படத்திற்கு பாஜக விளம்பரம் செய்து வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டையே கடுமையான சூழலுக்கு தள்ளிய மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்த போது கலவரத்தை கட்டுப்படுத்த தவறியவர் ஆவார். அத்தகைய மோடி மீது வழக்குப் பதிவு செய்ததில் இருந்து அனைத்துக் கடமைகளையும் மன்மோகன் சிங் சரியாகவே நிறைவேற்றி உள்ளார்.

இவ்வாறு பிரியங்கா காந்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/WithPGV/status/1078631235826573312