நான் நாத்திகனானேன் : பேராசிரியர் அ.ராமசாமி

Prof. A.Ramasamy FB status

 

a.ramasamy

 

 

 

 

_________________________________________________________________________

 

athiestபார்ப்பதையெல்லாம் கடவுளாக நினைத்தும் வழிபட்டும் வாழ்ந்தவர்கள் சுற்றி இருந்தார்கள்.ஒவ்வொரு நேரமும் கடவுளிடம் கேட்டுக்கேட்டுக் காரியங்கள் செய்யும் பழக்கமும் அவர்களிடம் இருந்தது. ஆனால் குடும்பத்திற்குள் ஏதாவது சொத்து மற்றும் பணப்பிரச்சினை என்றாலும் சரி, உறவினர் என்பதால் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்கவில்லையென்றாலும் சரி அவர்கள் காட்டும் வன்மமும் பகைமையும் வஞ்சினம் கொண்டதாக அமைவதையும் பார்த்துப் பயந்திருக்கிறேன். அப்போதெல்லாம் கடவுளை மறந்துவிட்டுப் பகை வளர்ப்பார்கள். தவறாமல் நல்ல நாட்களுக்கும் கெட்ட நாட்களுக்கும் கோயில், குளம் என்று அலைவார்கள் ஆனால் உறவுக்காரர்களையே கெடுக்கவேண்டுமென எப்போதும் திட்டமிடுவார்கள். இதன்மீதான கேள்விகள் எனக்குச் சின்ன வயதிலிருந்தே இருந்தன. அதனாலேயே குடும்பத்தினரிடம் பெரிய அளவு நெருக்கத்தைப் பேணியதில்லை. அதனை வளர்ப்பதுபோல எட்டாம் வகுப்புக்குப் பிறகு விடுதி வாழ்க்கைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.

 

 

விடுதியில் நுழைந்த நாள் முதல் போதனைகள், பிரார்த்தனைகள். எழுப்பியதும் பிரார்த்தனைக்கூட்டம், குளித்து முடித்து உணவுத்தட்டுக்கு முன் ஒரு ஜெபம், வகுப்பு தொடங்க ஒரு ஜெபம், முடிய ஒரு பிரார்த்தனை, திரும்பவும் விடுதியில் பிரார்த்தனைக்கூட்டம், ஜெபங்கள். தினசரி பைபிள் வாசிப்புகள், ஞாயிறு வகுப்புகள் எனப் பைபிளும் பிரார்த்தனைகளும் அன்றாட வாழ்வில் பகுதிகளாக மாறின. மணியடித்து அழைத்துக் கூடிப் பேசி, பாடி, இரங்கிக் கேட்டுக் கொண்டவைகளைக் காதுகொடுத்துக் கேட்கும் கடவுள் யாரென்றே தெரியவில்லை. பள்ளியில் நடக்கும் பதவிப்போட்டிகளும் ஆசிரிய – ஆசிரியைகளின் காதல்களும் கதைகளாக மாணவர்கள் வரை வந்து சேர்ந்துவிடும். கிறித்தவ சமய நடவடிக்கை சார்ந்த நிரலை உருவாக்குவதிலும் மனிதர்களை முன்னிலைப்படுத்துவதிலும் இருந்த சார்பும் அடையாளங்காணலும் கூட எனக்குள் கேள்விகளைத் தோற்றுவித்தன.

 

எல்லாவற்றையும் ஈடுபாட்டோடு செய்தாலும் நான் அந்நியனாகவே நினைக்கப்பட்டேன். அந்த நினைப்பை விரிவாக்கியவர் ஒரு தமிழாசிரியர். பத்தாம் வகுப்பில் உரைநடைகளை நடத்துவதற்காக வந்த அவரின் பெயர் அந்தோனி. நாத்திகராக அறியப்பட்ட அவரைப் பற்றி என்னோடு படித்த அவரின் மகன் சொன்ன கதைகள் சுவாரசியமானவை. அந்தக் கதைகள் தான் பெரியாரின் பக்கம் திருப்பின. பெரியார் எழுதிய சின்னச் சின்னப் பிரசுரங்களைக் கொண்டுவருவான். அவன் வீட்டில் அப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைய இருப்பதாகச் சொல்வான். ராமாயண, பாரதக் கதைகளை வாசித்திருந்த எனக்குப் பெரியார் முன்வைத்த வாதங்களோடு திரும்பவும் அவற்றை நினைத்துக்கொள்ள முடிந்தது. விளைவு அவை வெறும் கதைகளாக ஆகிவிட்டன; பைபிளும் கதைகளின் திரட்டாகத் தோற்றம் தந்தன. எல்லாவற்றையும் கதைகளாகப் பார்த்துப் பழகியே நான் நாத்திகனானேன்.

http://ramasamywritings.blogspot.in/2016/…/blog-post_10.html

________________________________________________________________________