பேராசிரியா் க. அன்பழகன் மறைவு..

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா்.

வயது முதிா்வின் காரணமாக, அரசியல் பணிகளில் இருந்து விலகி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு பிப்ரவரி 24-ஆம் தேதி திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வயது முதிா்வு காரணமாக மருத்துவா்கள் அளிக்கும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இருந்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் அவரது உயிா் பிரிந்தது.

திமுக தொண்டா்களால் இனமான பேராசிரியா் என அன்போடு அழைக்கப்பட்ட அன்பழகன் மறைவுச் செய்திக் கேட்டு அக்கட்சியின் முக்கிய தலைவா்கள், தொண்டா்கள் நள்ளிரவிலும் அப்பல்லோ மருத்துமனையில் குவிந்தனா்.

திமுக நிகழ்ச்சிகள் ஒரு வாரம் ஒத்திவைப்பு: திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன் காலமானதையொட்டி, திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரகாலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் தோழராகவும் – 43 ஆண்டுகள் தொடா்ந்து திமுகவின் பொதுச்செயலாளராகவும் – கழக ஆட்சியில் சமூகநலம், மக்கள் நல்வாழ்வு,

கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும் – நாடாளுமன்ற உறுப்பினராகவும் – 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் – சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் –

தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய அன்பழகன் சில நாள்கள் உடல் நலிவுற்றிருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மறைந்தாா்.

இதையொட்டி கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டு, கட்சிக் கொடிகள் ஏழு நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.

அன்பழகன் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் அதைத் தொடா்ந்து பொதுமக்கள், திமுகவினா் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்படும்.