தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் முனைவர் சுந்தரவள்ளி மீது சென்னை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த 12 ஆம் தேதி வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற “சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்தை மீட்போம்’’ நிகழ்ச்சியில் மற்ற சமூகத்தினரை தூண்டும் வகையில் பேசியதாக காவல்துறை ஆணையர் அலுவலக உத்தரவின் பேரில் திருவல்லிக்கேணி டி-1 காவல்நிலையத்தில் சுந்தரவள்ளி மீது கடந்த 21 ஆம்தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை சிஐடி நகர் கவிக்கோ மன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 31 ஆம்தேதி நடைபெற்ற, இதுதான் ராமராஜ்யம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் ராமரை அவதூறு செய்து பேசியாகவும் முகநூலில் ஐயப்பனை அவதூறு செய்து கருத்து பதிவு செய்துள்ளதாகவும் கூறி சுந்தரவள்ளி மீது இந்து மக்கள் முன்னணியை சேர்ந்த நாராயணன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்மீதும் வழக்குப் பதிவு செய்து சுந்தரவள்ளி மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
கருத்துரிமையை பறிக்கும் வகையில் சுந்தரவள்ளி மீது வழக்கு தொடுத்துள்ள காவல்துறைக்கு தமுஎகச கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்றும் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன், மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.