முக்கிய செய்திகள்

சொத்து வரியை உடனடியாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : விஜயகாந்த்…


தமிழக அரசு அண்மையில் சொத்து வரியை 100 சதவிகிதம் அதிகரித்து அரசாணை வெளியிட்டது.இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது, கொள்ளைக்காரன் ஆயுதத்தைக் காட்டி மக்களிடம் பணம் பறிப்பதற்கு ஒப்பானது என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு சொத்து வரியை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் குடியிருப்புகளுக்கு சொத்துவரி 50 சதவீதமும், வாடகை குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரியை உயர்த்தி, வாடகைதாரர்கள், வணிகர்கள், பொதுமக்கள், என பல தரப்பட்டவர்களுக்கும், கடும்பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.

சொத்துவரியை உயர்த்தினால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களுக்கு, வாடகையை உயர்த்தும் சூழ்நிலை ஏற்படும். இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். மேலும் வாடகை உயர்வால் வணிகர்கள் தாங்கள் வணிகம் செய்யும் பொருளின் மீது கூடுதல் விலையை ஏற்றி, விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும், நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள்.

இத்தகைய நெருக்கடியான சூழலை உருவாக்க காரணம் என்ன? தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்ற நிலையில், மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெறவேண்டிய ரூபாய் 3 ஆயிரத்து 500 கோடிக்கும் மேற்பட்ட நிதியை இன்னமும் பெறமுடியாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை வலுபடுத்த முடியாத நிலையிலும், ஆளும் அதிமுக அரசு சொத்துவரியை மட்டும் உயர்த்தி வாடகைதாரர்கள், வணிகப்பெருமக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும் வண்ணம் மக்களை சொல்லொணாத் துயரத்தில் இந்த நிர்வாகத் திறமையற்ற அதிமுக அரசு தள்ளியிருக்கிறது.

மக்கள் விலைவாசி உயர்வால் ஒருபுறம் தவித்துக் கொண்டிருக்க, அதைப்பற்றியெல்லாம் துளி கூட பொருட்படுத்தாமல் பேருந்து கட்டணத்தை ஒரே நாளில் வானளவு உயர்த்தி ஏழை, எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்த, தமிழக அரசு சொத்துவரி உயர்வு மூலம் பொதுமக்களின் தலையில் மீண்டும் பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்து தாங்க முடியாத சுமையை உருவாக்கி உள்ளது.

சொத்துவரி உயர்வை சிறிது, சிறிதாக உயர்த்தி இருந்தால் மக்கள் தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டு வரி உயர்வை எதிர்கொள்ள தயாராவார்கள். ஆனால் அதனையெல்லாம் விடுத்து, பேருந்து கட்டணத்தை ஒரே நாளில் உயர்த்தியது போல சொத்துவரியையும் 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தியது பெரும் கண்டனத்திற்கு உரியது.

மேலும் இங்கு உள்ளாட்சி அமைப்புகளினுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் அந்தந்த இருப்பிடத்திற்கு ஏற்ப வரியை நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரம் படைத்தவர்கள். ஆனால் இங்கு இன்னும் உள்ளாட்சி தேர்தலே நடத்தப்படாத நிலையில், அதிகாரம் உள்ளவர்களே இல்லாது மக்களுக்கு நெருக்கடியான துன்பத்தை தருக்கின்ற எந்த திட்டத்தையும் அறிவிக்க முடியாது.

எனவே அதிகாரமே இல்லாது அவசரகால நெருக்கடியில் சொத்துவரியை 100 சதவீதம் உயர்த்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மக்களை நெருக்குகின்ற சொத்துவரியை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். தவறும் பட்சத்தில் மக்களுக்கான களத்தில், போராட்டம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கையில் தேமுதிக இறங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

“வேலோடு நின்றான் இடுவென்றது போலும்

கோலொடு நின்றான் இரவு”

என்கிற திருக்குறளின் கருத்து, நடு இரவில் கொள்ளைக்காரன் ஆயுதத்தைக் காட்டி மக்களிடம் பணம் பறிப்பது எவ்வளவு கொடுமையானதோ, அவ்வளவு கொடுமையானது ஆட்சியாளன் நள்ளிரவில் சட்டம் இயற்றி தன் குடிமக்களிடம் அதிகவரி வசூலிப்பது ஆகும். எனவே மக்களின் நிலை அறிந்து நல்லாட்சி செய்யும் அரசன் வரியை வசூலிப்பதே சால சிறந்ததாகும்.

எனவே, ஏற்கெனவே பல நெருக்கடியில் உள்ள தமிழக மக்களை மேலும் நெருக்கடி நிலைக்கு ஆளாக்காமல் உடனடியாக சொத்துவரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.