மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தென் இந்திய தேசிய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், காவிரி விவகாரத்தில் மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி டி ராஜா, அய்யாக்கண்ணு  மெரினா கடற்கரையில் ஒரு நாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு  உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் கே.கே சசிதரன், ஆர். சுப்பிரமணியன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததோடு,  மெரினா கடற்கரையில் போராட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.

சென்னை மாநகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால் மெரினா கடற்கரையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்றும்  தமிழக அரசு வாதிட்டதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என்றும்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.

அரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி!: செம்பரிதி

ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை: இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

Recent Posts