‘காங்கிரசால் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது’ என்று பா.ஜ தலைவர் அமித்ஷா சமீபத்தில் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாட்டு மக்களை பிரதமர் மோடி பீதியான நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்போதுதான், தன்னால் நாட்டை ஆள முடியும் என்பதே அவரது திட்டம்.
ஆனால், மக்களாகிய நீங்கள் எங்கு அச்சமற்ற நிலை உள்ளது என நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
கடந்த 1947, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் போர்கள் நடந்தபோது நாட்டை பாதுகாப்பாக வைத்திருந்தது யார்? இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன?
பெண்கள், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பின்றி இருக்கலாம் என அர்த்தமா? இவ்வாறு சிதம்பரம் கூறினார்.