முக்கிய செய்திகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 70 குழந்தைகளை திறந்த வெளியில் படுக்க வைத்த அவலம்!

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 70 குழந்தைகள், திறந்தவெளியில் படுக்க வைக்கப்பட்டதால் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை, 6 முதல் 12வயதுக்கு உட்பட்ட 70 குழந்தைகளை, அருகில் உள்ள புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் கட்டிடத்திற்கு அனுப்புவதாகக் கூறி வெளியேற்றியுள்ளனர். அங்கு நிகழ்ச்சி நடைபெற இருப்பதை காரணம் காட்டி, எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத கட்டிடத்தில் பல மணி நேரமாக குழந்தைகளை தங்க வைத்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் சிறுமிகளுக்கு இரவு உணவு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு வந்த அதிகாரியிடம், 70 குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகளை விரைந்து வழங்கும்படி பெற்றோர்கள் கேட்டுக் கொண்டனர்

இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் அவசரம் அவசரமாக குழந்தைகள் அனைவரையும் ஒரு வாகனத்தில் ஏற்றி புதிய அறைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக 70 குழந்தைகள் பல மணி நேரம் சிகிச்சை இன்றி தவிக்க நேரிட்டதாக, பெற்றோர்களும் உறவினர்களும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Public protest in Nellai GH