தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான், மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரே ஆண்டு காலம் இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி அறிவிக்கவில்லை. இது ரஜினி ரசிகர்கள் மற்றும் அவரை ஆதரிப்பவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு மாறாக, தமிழகத்தில் பட்டிதொட்டி எல்லாம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும், தமிழக மக்கள் இடையே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சித் தொடங்குவேன் என்றும்,
அரசியலில் மாற்றம் ஏற்படாது என்று தெரிந்தால், நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 2021ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர்கள் தற்போது தமிழகத்தில் இல்லை.
தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவரின் வாரிசையும், தமிழகத்தை ஆளுபவர்களையும், முழு கஜானாவையும் வைத்திருப்பவர்களையும் நாம் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது ஏற்படாவிட்டால் எப்போதும் ஏற்படாது, நமது ஒரே முழக்கம் அசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்றும் ரஜினி கூறியுள்ளார்.
வெறுமனே வாக்குகளைப் பிரிப்பதற்காக மட்டும் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்குவது குறித்து 3 திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறிய அவர், அரசியலில் மாற்றம் கொண்டு வருவதே தனது முடிவு என்று கூறினார்.
அவர் கூறிய 3 திட்டங்கள் என்னவெனில்,
1. தேர்தல் நேரத்தில் மட்டுமே பணியாளர்களுக்கு வேலை
தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளில் 50,000க்கும் மேல் கட்சிப் பதவிகள் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டுமே அது தேவை. மற்ற நேரங்களில் அது தேவையில்லை.
தேர்தலில் வெற்றி பெற பிறகு அவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அது நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு.
எனவே, வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிப்பது போன்று, தேர்தல் பணி நேரத்தில் மட்டுமே பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படும்.
2. 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
கட்சி பதவிகளில் 60 முதல் 65% பணியிடங்கள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
3. ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை
தேசியக் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளில் ஆட்சிக்கும், கட்சிக்கும் அவர் தான் தலைவர். இதனால் கட்சியில் இருந்து யாரும் கேள்வி கேட்க முடியாது.
கொள்கைகள் தான் கட்சி. அதைவைத்து தான் கட்சி சொல்கிறது. கட்சியின் கொள்கைகளை ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்த வேண்டும்.
அனைத்துத் துறையிலும் அனுபவம் உள்ளவர்களை வைத்து ஒரு குழு அமைத்து. அந்தக்குழு சொல்வதை ஆட்சித் தலைமை செயல்படுத்த வேண்டும். இது எனது திட்டம் என்று தெரிவித்தார்.
2021ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும். தமிழக மக்கள் தங்கள் எதிர்கால சந்ததியினருக்காக 2021ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று தெரிந்தும் நான் அரசியலில் வந்து என்ன பலன்?
இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை உருவாக வேண்டும். அப்போதுதான் அசுர பலம் கொண்ட கட்சிகள் தோற்றும். அற்புதத்தை நிகழ்த்த மக்கள் தயாராக இருக்கின்றனர்.
நான் வருங்கால முதல்வர் என்று கூறுவதை தொண்டர்கள் நிறுத்த வேண்டும். என்னுடைய கட்சி நிர்வாகள் நான் கூறியதை ஏற்று மக்களை சந்திக்க வேண்டும்.
கடந்த கால தேர்தல்களில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் 30% பேர் கட்சிக்காகவும், ஜெயலலிதாவுக்காக 70% பேரும் வாக்களித்தனர்.
அதுபோலவே திமுகவுக்கு வாக்களித்தவர்கள் கட்சிக்காக 30% பேரும், கருணாநிதிக்காக 70% பேரும் வாக்களித்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.