புதுச்சேரியில் மார்ச் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (மார்ச்-21) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“புதுச்சேரி கடற்கரை சாலை வரும் 31-ம் தேதி வரை முழுமையாக மூடப்படுகிறது. காரணம் காலை, மாலை நேரங்களில் ஏராளமான மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதன் காரணமாக கரோனா வைரஸ் பரவும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளை ஏற்கெனவே அறிவித்தது போல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும். மதுபானக்கடைகளும் முழுமையாக மூடப்படும். மக்கள் நடமாட்டம் முழுமையாக தவிர்க்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 31-ம் தேதி வரை வெளியே நடமாடுவதை தடுக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக வெளியில் நடமாடக்கூடாது.

அத்தியாவசிய வேலைகள் தவிர மற்ற தினங்களில் சுப நிகழ்ச்சிகள், துக்க நிழ்ச்சிகளில் கூட குறைவான நபர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
கரோனா வைரஸின் தாக்கம் இந்திய நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு நாளைக்கு 20 முதல் 25 பேருக்கு அறிகுறி இருந்தது. நேற்று அது 63 ஆக அதிகரித்தது. இதிலிருந்து இந்த கரோனா வைரஸ் இந்தியாவில் அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது என்பதை நாம் கருத்தில்கொண்டு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரோவில் பகுதியில் நிறைய வெளிநாட்டவர் வந்து செல்கின்றனர். அவர்களும் புதுச்சேரிக்கு வருகின்றனர். அவர்கள் எங்கு தங்குகின்றனர். எந்த பகுதிக்கு செல்கின்றனர் என்பதை கண்டுபிடிப்பது மிகுந்த சிரமமாக இருக்கிறது. ஆகவே மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் ஆரோவில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஏற்கெனவே கடந்த 14-ம் தேதியில் இருந்து வெளிநாட்டவர்கள் ஆரோவில்லுக்குள் வரக்கூடாது என்று தடை உத்தரவு போட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து ஆரோவில் வருபவர்கள் தடுக்கப்படுவார்கள். இசிஆர் சாலையில் ஆரோவில் செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியர், மருத்துவக் குழுவினர் கண்காணித்து அவர்களை பரிசோதனை செய்தவற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள், மருத்துவமனைக்கு வருபவர்கள் குறைவான எண்ணிக்கையில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (மார்ச் 23) காலை முதல் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இடையில் காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கலாம்.
உணவு பொருட்கள், மருந்து விற்பனையகங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அங்கும் கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

புதுச்சேரிக்கு வருகின்ற வாகனங்கள் குறைவாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர், மருத்துவத்துறை, வருவாய்துறை அதிகாரிகள், ஆஷா, அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை கண்காணிக்க மருத்துவ சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் இன்றைய தினம் கரோனா நோயாளிகள் இல்லை. ஏற்கெனவே மாஹே பகுதியில் உள்ள கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பெண்மணி உடல்நலம் தேறி வருகிறார்.

அத்தியாவசிய துறைகள் தொடர்ந்து இயங்கும். நானும், அமைச்சர்களும் அவர்களுடன் இணைந்து கரோனா வைரஸ் புதுச்சேரி மாநிலத்தில் பராமல் இருக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.

பொதுமக்கள் மாநில அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழக அரசு ஒத்தி வைத்துள்ளது. அதனை புதுச்சேரியிலும் அரசு நடைமுறைப்படுத்தும்” என்று தெரிவித்தார்.