முக்கிய செய்திகள்

விரைவில் உள்ளாட்சி தேர்தல் : புதுச்சேரி பட்ஜெட் உரையில் நாராயணசாமி அறிவிப்பு..


பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களால், மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டும், ஜூன், ஜூலை மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தாண்டும் கடந்த மார்ச் மாதம், 4 மாத காலத்திற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கவர்னர் கிரண்பேடி தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடத்தி, ரூ.7,530 கோடிக்கு திட்டங்கள் தயாரித்து, முழு பட்ஜெட் வரைவு தயார் செய்யப்பட்டது. மாநில அரசு தயாரித்த பட்ஜெட் திட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரியையும், அதிகாரிகளையும் சந்தித்து பேசி கடந்த 19–ஆம் தேதி புதுவை மாநில பட்ஜெட்டிற்கு அனுமதி பெற்றார்.

இதனையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அநேகமாக பட்ஜெட் கூட்ட தொடர் ஜூலை 20-ஆம் தேதி வரை சுமார் 15 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தொடரில் நிதி நெருக்கடி, கவர்னர் தலையீடு, இலவச அரிசி விவகாரம், துறைமுக விரிவாக்கம், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பள மின்மை உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினையை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சட்டசபை கூடுவதையொட்டி புதுவை நகரப்பகுதியில் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது.

பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 4ம் தேதி கூடியது. ஆனால், புதுச்சேரி அரசு அனுப்பிய பட்ஜெட் திட்ட வரையறையில் பல்வேறு சந்தேகங்களை மத்திய அரசு எழுப்பியது. இதனால், பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி தருவதில் காலதாமதம் ஏற்பட்டதால், இரண்டே நாட்களில் சட்டசபை கூட்டம் முடிக்கப்பட்டு, கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
பட்ஜெட்டில் 150 கோடியில் மனமகிழ் மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்,மேலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.