“புதுவை அரசியலில் அசாதாரண சூழலை உருவாக்கிறார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி : ஸ்டாலின் குற்றச்சாட்டு..

ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் முன்பு நேற்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணி முதல் தர்ணாவில் ஈடுபடத் தொடங்கினர்.

இதனால் ஆளுநர் மாளிகையில் இருந்து அவர் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. ஆளுநர் மாளிகையைச் சுற்றி தொண்டர்கள் சூழ்ந்து நின்றனர். கிரண்பேடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வந்தனர்.

போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துணைநிலை ஆளுநரின் மத்திய அதி விரைவு படையின் 4 கம்பெனிகள் புதுச்சேரி வந்துள்ளன.

இவர்கள் காலை 7 மணி முதல் ஆளுநர் மாளிகையைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மத்திய அதிவிரைவுப் படையினர் ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் முன்பு அரணாக நின்றனர்.

இந்நிலையில், ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “புதுவை அரசியலில் அசாதாரண சூழலை உருவாக்குவதற்கு துணை நிலை ஆளுநரே காரணமாக இருப்பது அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது.

ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதற்கு இதுவே உதாரணம்!

ஆளுநர் பதவி தேவைதானா என்கிற கேள்வியே மீண்டும் எழுகிறது” என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.