காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.
இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியான புல்வாமா தக்குதலை நடத்தியது ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் தீவிரவாதி என தெரியவந்து உள்ளது.
புல்வாமா தாக்குலை நடத்தியபோது காரில் பாகிஸ்தான் பயங்கரவாதி இருந்திருக்கலாம் என புலனாய்வு அமைப்பு கூறுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி அப்துல் ரஷீத் காசி மூளையாக செயல்பட்டு இருக்கலாம் என புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பின்க்லான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். விடிய விடிய நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி அப்துல் ரஷீத் காசி மற்றும் கம்ரான் என்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் அப்துல் ரஷீத் காசி ஆவான்.