புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த 28 வயது தமிழக வீரர்; சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி கிராமம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஒருவர்.

அவருடைய சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவர், ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் சென்றுள்ளார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர்.

அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரியை சேர்ந்த கணபதி என்பவரது மகன் சுப்பிரமணியன்(28). ஐடிஐ வரை படித்துள்ள சுப்பிரமணியன்,

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிஆர்பிஎப் போலீசில் சேர்ந்தார். உத்தரப்பிரதேசத்தில் தனது பணியை ஆரம்பித்த சுப்பிரமணியன் சென்னை காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

தைப்பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த ஞாயிறன்று தான் ஊரிலிருந்து கிளம்பி சென்றுள்ளார்.

நேற்று மதியம் 2 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து தான் வேலைக்கு செல்வதாக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்கொலை படைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சவலப்பேரி கிராமமே சோகத்தில் முழ்கியுள்ளது.