குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கேரளத்தைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புது தில்லியில் இன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதன்மைச் செயலர்களும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
இந்த நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த சட்டம், சமத்துவம், சுதந்திரம், மதச்சாா்பின்மை ஆகியவற்றுக்கு எதிரானது என அறிவிக்குமாறும் அந்த மனுவில் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள
ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை அணுகிய முதல் மாநில அரசு கேளரமாகும்.
தற்போது கேரள அரசைத் தொடர்ந்து பஞ்சாப் அரசும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.