பஞ்சாப் நேசனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி சிபிஐ வழக்குப் பதிவு


பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் பணப்பரிமாற்றத்தில் 11ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் பணப் பரிமாற்றத்தில் பல்வேறு கணக்குகளில் 11ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப் நேசனல் வங்கிக்கு 280கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வைர வணிகர் நீரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி கோகுல்நாத் செட்டி, வங்கிப் பணியாளர் மனோஜ் காரத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. நிதி மோசடி தெரியவந்ததையடுத்து மும்பை பங்குச் சந்தையில் பஞ்சாப் நேசனல் வங்கியின் பங்கு மதிப்பு ஒரேநாளில் 9 புள்ளி 8 விழுக்காடு சரிந்துவிட்டது.

செவ்வாய்கிழமை மாலை 161ரூபாய் 65காசுகளாக இருந்த பஞ்சாப் நேசனல் வங்கியின் பங்கு மதிப்பு வணிகநேர முடிவில் 15ரூபாய் 85காசுகள் வீழ்ச்சியடைந்து 145ரூபாய், 80காசுகளாக இருந்தது. இதன்மூலம் இந்த வங்கியின் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் மட்டும் மூவாயிரத்து 844கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.