மாணவிகளிடம் சானிட்டரி நேப்கின் சோதனை: பஞ்சாப் முதல்வர் விசாரணைக்கு உத்தரவு..

பள்ளி கழிவறையில் ஒரு சானிட்டரி நேப்கின் வீசி எறியப்பட்டதைக் கண்ட அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள்

சில மாணவிகளின் ஆடைகளை முழுதும் களையச் சொல்லி யார் சானிட்டரி நேப்கின் அணிந்திருக்கிறார்கள் என்று சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையாகி பஞ்சாப் முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

3 நாட்களுக்கு முன்பாக பஞ்சாப் மாநிலத்தின் ஃபாசில்கா மாவட்டத்தின் குந்தால் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நடத்திய இந்த அராஜகச் செயலின் வீடியோ கிளிப் வெளியானது.

சில மாணவிகள் அவமானம் தாங்க முடியாமல் அழுதபடியே தங்கள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

விஷயம் விபரீதமாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது, அவர் உடனடியாக விசாரணைகு உத்தரவிட முதற்கட்டமாக 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கல்விச்செயலர் கிருஷன் குமார் திங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாகப் பள்ளிக்குச் சென்று மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் 2 ஆசிரியர்களுக்கு எதிராக சாட்சிகள் இருந்ததால் இருவரும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று பஞ்சாப் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.