ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் மட்டுமல்ல இன்னும் ஆயிரம் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மனதுக்கும் உடலுக்கும் இதமளிக்கும் அழகிய மாவட்டம். கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது என கோவை மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றினார்.
தொழிற்துறை மற்றும் சிறுதொழில்களின் மையமாக கோவை திகழ்கிறது, ஆன்மீகம் கலந்த பூமியாகவும் கோவை திகழ்கிறது. எம்ஜிஆரின் திரை வாழ்க்கையில் கோவை முக்கிய பங்கு வகித்தது. மருதமலை அடிவாரத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் பாரதியார் பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் நம்பிக்கைக்குரிய மாவட்டமாக கோவை திகழ்ந்தது. கொங்கு மொழி தேனைவிட இனிமையானது. ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர் எம்ஜிஆர்.
கோவையில் ரூ.1328 கோடி மதிப்பிலான 39 பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளேன். ரூ.20,211 கோடி மதிப்பீட்டில் 43,143 பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழில்புரிவோருக்கு அரசு துணைநிற்கும். தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீரா பானம் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் மட்டும் இன்னும் ஆயிரம் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும். ஒரு சிலரது பேராசை சுக்குநூறாக உடைந்திருக்கிறது.
ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்பு பகுதிகளை சரிசெய்வதற்காக உடனடியாக வருவாய்த்துறை அமைச்சரை அனுப்பினோம், மின்துறை அமைச்சர் தங்கமணியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மின்சார சீரமைப்பு பணிகள் செவ்வனே நடைபெற்று வருகிறது, ஓரிரு நாட்களில் முழுமையாக சீரடையும். நடமாடும் மருத்துவக் குழுக்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன
விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களை மீட்பதற்காக பிரதமரிடமும், மத்திய உள்துறை அமைச்சரிடமும் பேசினேன். மத்திய அரசும் கப்பற்படை, கடலோரக் காவல்படையை சேர்ந்த 15 கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது
4 விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முனைப்போடு செயல்படுத்தி வருகிறது.
மீனவர்கள் மீட்கப்படவில்லை என்று கூறப்படுவது தவறான தகவல். மீனவர்கள் அனைவரையும் மீட்போம், மீனவ மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.