ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் ஸ்டாலின் இன்று தன் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர்களின் வீடுகளுக்குச் சென்று தேநீர் அருந்தி குறைகளைக் கேட்டறிந்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு பெற்றது. இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பதால் அனைவரும் ஆர்.கே.நகரில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். டிடிவி தினகரன் காசிமேடு பகுதியிலும், மதுசூதனன் வ.உ.சி நகர் பகுதியிலும், மு.க.ஸ்டாலின் மருது கணேஷை ஆதரித்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நேதாஜி நகரிலும் வாக்கு சேகரித்தனர்.
மு.க ஸ்டாலின் வழக்கமாக அணியும் வெள்ளை வேட்டி வெள்ளைச்சட்டை அணியாமல் கருநீல கலர் சட்டையும், சாம்பல் நிற பேன்ட்டும் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் இடையே நேதாஜி நகரில் இஸ்லாமியர் ஒருவரின் வீட்டுக்குள் ஸ்டாலின் சென்றார். அவர் திடீரென வீட்டுக்குள் வந்ததைக் கண்டு திகைப்படைந்த பெண்கள் அவரை வரவேற்றனர்.
அவருக்கு தேநீர் வழங்கினர், அதை ஸ்டாலின் அருந்தினார். ஸ்டாலின் வந்த தகவல் பரவியதும் அக்கம் பக்கத்து பெண்கள் ஸ்டாலினைச் சந்திக்க வீட்டுக்குள் வந்தனர். அவர்களிடம் சிறிது நேரம் ஸ்டாலின் பேசினார்.
அவர்கள் குறைகளைக் கேட்டார். தண்ணீர் சரிவர வருவதில்லை, சாக்கடை நீர் கலந்து வருகிறது என்று பெண்கள் தெரிவித்தனர். மருது கணேஷை தேர்வு செய்யுங்கள் அந்தக் குறையை தீர்த்து வைக்கிறோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
பின்னர் அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை அழைத்துப் பெயர் விபரம், கேட்டார். பள்ளிக்கு ஒழுங்காக செல்கிறீர்களா என்ன வகுப்பு படிக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.