முக்கிய செய்திகள்

குற்றம் ஆர்.கே.நகர் மக்கள் மீதல்ல மேதாவிகளே!: தலையங்கன்(ம்)“விளிம்பு மனிதர்களை விமர்சிப்பது சுலபம்                         

விளிம்பில் நின்று பார்த்தால் தான் தெரியும்”

ஆர்.கே. நகர் மக்கள் குறித்த விமர்சனங்களைக் கேட்கும் போது, கவிஞர் விக்கிரமாதித்யனின் இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

“தேர்தலை ரத்து செய்து விட்டால் ஆர்.கே.நகர் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். மீண்டும் ஒருமுறை தேர்தல் ரத்தானால், மறுபடியும் தேர்தல் வைப்பார்கள். வாக்குக்குப் பணம் கிடைக்கும் என்று குதூகலிப்பார்கள்…” என்றெல்லாம், படித்தவர்களும், சில பத்திரிகையாளர்களும் கூட பேசுவதைக் கேட்க முடிகிறது.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதுதான் ஆர்.கே.நகர் தேர்தலில் மிக முக்கியமான பிரச்சினையாக அப்போதும், இப்போதும் இருந்து வருகிறது. உண்மைதான்.

ஒரு தொகுதி தேர்தலுக்காக ராணுவத்தையே குவிக்கிறார்கள். கடலில் செத்து மிதக்கும் மீனவர்களுக்கு வழங்கத் தயங்கும் நிதியை, இடைத்தேர்தலுக்காக எண்ணிப் பாராமல் செலவு செய்கிறது அரசு இயந்திரம்.

பணமும், பரிசுகளும் இல்லாமல் இனி வாக்காளர்கள் வாக்களிக்கவே மாட்டார்களா என நடுநிலையாளர்கள் புலம்புகின்றனர்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு எதிராக நாம் பார்க்கும் அனைவருமே கொந்தளிக்கிறார்கள். கமல்ஹாசனைப் போன்றவர்கள் கூட, கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து வாக்குக்காக பணம் வாங்கும் வாக்காளர்களை சாடி இருக்கிறார்கள்.

ஏன் இந்த வாக்காளர்கள் திருந்த மறுக்கிறார்கள்?

கேள்வி என்னவோ மேலோட்டமாக பார்க்கும் போது நியாயமானதாகத்தான் தோன்றுகிறது.

வாக்குக்காக பணம் வாங்கும் வாக்காளர்கள் யார் என்பதை கவனித்தால், நாம் நியாயமெனக் கருதுவது எத்தகைய அநியாயம் என்பது புரியும்.

ஆர்.கே.நகரில் கொடுப்பதைப் போல, அடையாறிலோ, மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் இன்ன பிற பகுதிகளிலோ வாக்குக்கு பணம் கொடுப்பது அத்தனை எளிதல்ல. அப்படி கொடுக்கப் போனால், “கால் த போலீஸ்” என்று கையோடு பிடித்துக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். காரணம் அது கனவான்கள் வாழும் பகுதி.

60களுக்கு முன்னர் நடந்த தேர்தலின் போதே, காங்கிரஸ் காரர்கள் வாக்குக்குப் பணம் கொடுப்பது பற்றி அண்ணா கடுமையாக சாடி பேசியிருக்கிறார். வாக்குக்கு 5 ரூபாய் வாங்குகிறீர்களே.. அது எத்தனை நாள் சாப்பாட்டுக்கு வரும் என்று பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசியது குரல் பதிவாகவே இருக்கிறது. அப்படி என்றால், அன்று முதல் இன்று வரை வாக்குக்கு பணம் வாங்குவோரில் பெரும்பாலோர், அடிப்படைத் தேவைகளுக்காக ஏங்கும் அடித்தட்டு மக்கள்தான்! இப்போதும் கூட, அரசியல் கட்சிகளின் கணிசமான வாக்கு வங்கிகள் அவர்கள்தான். (தினவெடுத்து வாக்குகளைப் பணத்திற்காக விற்கும் “பண நோயாளிகள்” கதை வேறு) பசியில் வாடிக் கொண்டிருப்பவன் எதிரில் அறுசுவை உணவை வைத்து  மூடி, இதை எடுக்காதே என்றால் எப்படி? நாடு விடுதலை அடைந்து விட்டதாக கூறி, 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. வெள்ளையர்களால் கருப்பு நகரமாக பார்க்கப்பட்ட  வடசென்னைக்கு, விடுதலைக்குப் பின்னரும் விடுதலை கிடைக்கவில்லை. அந்த மக்களைக் கையேந்தும் நிலையில்தான் இத்தனை ஆண்டுகாலமாக இந்தச் சமூகமும், அமைப்பும், அரசியலும் வைத்து வேடிக்கை பார்க்கிறது.. அடிப்படைத் தேவைகளுக்காக அல்லாடாத, சுயமரியாதை மிக்க வாழ்க்கை அவர்களுக்கு கிடைத்திருக்குமேயானால், அரசியல் கட்சிகளிடம் ஏன் அவர்கள் பிச்சை எடுக்கப் போகிறார்கள். தேர்தலின் போது, வாக்குக்கு 6 ஆயிரம் ரூபாயை அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கும் அரசியல் கட்சியின் தலைவர்கள் யாரேனும், சாதாரணமாக ஏழை, எளிய மக்களுக்கு 50 ரூபாயாவது கொடுத்திருப்பார்களா?  

சமூகத்தின் ஒரு பகுதியை மலையாகவும், மற்றொரு பகுதியை மடுவாக அல்ல, கிடுகிடு பள்ளத்தாக்காகவும் வைத்துக் கொண்டு, வாக்குக்குப் பணம் வாங்குவதைத் விமர்சிக்கும் யோக்கியதை இங்கு யாருக்கும் இல்லை.

அடிப்படைத் தேவைகளுக்கு யாரிடமும் கையேந்தாத  ஒரு சமூகத்தை உருவாக்கி விட்டு, அதற்குப் பின்னர் கையேந்துவதை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் மக்கள் என்னவோ இதற்காகவே காத்துக் கொண்டிருப்பதைப் போல விமர்சிப்பது, சுயமரியாதையுடன் வாழும் எளிய மக்களின் மான உணர்ச்சியைச் சீண்டிப் பார்க்கும் செயலாகும். அவர்களைத் தேடி அரசியல் கட்சிகள்தான் செல்கின்றன. அவர்கள் யாரும் இவர்களைத் தேடி வரவில்லை.

ஆர்.கே.நகர் என்பது ஓர் உதாரணம் தான். அது ஆண்டிப்பட்டியாக இருந்தாலும், உசிலம்பட்டியாக இருந்தாலும் வாக்குக்குப் பணம் கொடுக்கும் விவகாரத்தை இப்படித்தான் அணுக வேண்டும். மேடு, பள்ளமற்ற சாலையில்தானே வாகனங்கள் குலுங்காமல் செல்லுகின்றன. அப்படியென்றால், மேடு பள்ளத்துடன் காணப்படும் சமூகத்தில் மட்டும்  அலுங்காமல், குலுங்காமல் எப்படிப் பயணிக்க முடியும்? சமூகத்தின் மேடு, பள்ளங்களைச் சமப்படுத்தாமல் ஜனநாயகம் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ள முடியாது. பொருளாதார விடுதலையும், சமூக விடுதலையுமே மக்களுக்கு மான உணர்ச்சியையும், சுயமரிதை சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். குற்றம் ஆர்.கே.நகர் மக்கள் மீதல்ல மேதாவிகளே!

R.K.Nagar Election