ஆர்.கே.நகரில் அனைத்து வாக்குச்சாவடி, வாக்குப்பதிவும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவை இணையத்தில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று, திமுக வேட்பாளர் மருது கணேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஒளிபரப்பு செய்வதாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
மேலும் தேர்தலை நிறுத்தும் நோக்கத்துடன் திமுக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், ஒவ்வொரு வாக்காளரும் பணம் பெறுவதாக திமுக சித்தரிக்கிறது என திமுக மீது தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்த திமுக தரப்பு, தேர்தல் சிறப்பு அதிகாரி பந்ரா சென்னை வந்த நாளில் மட்டும் ரூ.100 கோடி அளவில் பணபட்டுவாடா நடந்துள்ளதாக குற்றம்சாட்டியது. இதனை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.