ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடியை மனோகர் பாரிக்கர் மிரட்டுகிறார்: ராகுல் கடும் குற்றச்சாட்டு..

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் ரஃபேர் போர் விமானக் கொள்முதல் குறித்த ஆவணங்கள் இருப்பதாகக் கோவா அமைச்சர் ஒருவர் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில்

பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

பிரதமர் மோடியை கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மிரட்டுகிறார் என்று பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. அப்போது, முதல்வர் மனோகர் பாரிக்கர்

“ ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த அனைத்து ஆவணங்களும் தன்வீட்டுப் படுக்கை அறையில் இருக்கிறது” என்று தெரிவித்ததாக கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே பேசிய ஆடியோ வெளியானது.

இந்த ஆடியோவை காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களைச் சந்தித்தபோது வெளியிட்டார்.

ஆனால் இந்த ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது, காங்கிரசின் வேலை இது என்று பாஜக சாடியுள்ளது.

இந்நிலையில் மனோகர் பாரிக்கர், பிரதமர் மோடியை மிரட்டுகிறார் என்று ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆடியோ டேப்கள் போல் இன்னும் பல டேப்கள் இருக்கலாம் என்றும் ராகுல் காந்தி கூறுகிறார்.

“ரபேல் ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த கோப்புகளும் தன்னிடம் இருப்பதாக பாரிக்கர் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாக கோவா அமைச்சர் தெளிவாகக் கூறுகிறார்.

இது போன்ற பிற ஆடியோ டேப்களும் இருக்கலாம்” என்று குற்றம்சாட்டியுள்ளார் ராகுல் காந்தி.

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி, “ரபேல் ஒப்பந்தத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ஏன் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகின்றனர்.

நிதியமைச்சர் அருண் ஜேட்லியே கூறுகிறார் ரஃபேல் ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த தொகை ரூ.58,000 கோடி அல்லது ஒரு விமானத்துக்கு ரூ. 1,600 கோடி என்று.

ரபேல் போர் விமானத்தின் விலை ரூ526 கோடியிலிருந்து ரூ.1600 கோடியாக அதிகரித்துள்ளது என்றுதானே பொருள். ரபேல் போர் விமான விலை குறைக்கப்பட்டது என்றால் ஏன் 126 விமானம் என்பது 36ஆக குறைக்கப்பட்டது?

மோடிக்கு என்னைச் சந்திக்கத் தைரியமில்லை. ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவோம்” என்று கூறினார் ராகுல் காந்தி.

முன்னதாக மக்களவையில் பேசிய போது, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்கக் கூடாது என்றோ,

நாடாளுமன்றம் விசாரணை நடத்தக்கூடாது என்றோ கூறவில்லை. ரஃபேல் ஒப்பந்தத்தில் உண்மையை அறிய வேண்டும்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை. உண்மை வெளிவர வேண்டும்,” என்றார் ராகுல் காந்தி.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக எம்.பிக்கள் 26 பேர் சஸ்பெண்ட்

Recent Posts