ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்,
அவர் ஒரு ஊழல்வாதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த விமானம் ஒவ்வொன்றும் ரூ.526 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, முதல் கட்டமாக பறக்கும் நிலையில் உள்ள 36 ரஃபேல் போர் விமானங்களை ஒவ்வொன்றும் ரூ.1,670 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், இந்த ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2015-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்கு 12 நாட்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
எந்த விதமான முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரஃபேல் போர் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் தரப்பட்டு ஊழல் நடந்துள்ளது.
ஆனால், காங்கிரஸ் அரசில் இந்த ஒப்பந்தம், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருந்ததை பாஜக அரசு ரத்து செய்துவிட்டது என்று குற்றம் சாட்டியது.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலாண்டேவும்,
மத்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர வேறுஎந்த நிறுவனத்தையும் தேர்வு செய்ய அதிகாரம் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். இதற்கு பாஜக அரசு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், பிரான்ஸில் இருந்து வெளிவரும் புலனாய்வு பத்திரிகை மீடியாபார்ட் வெளியிட்ட செய்தியில்,
ரஃபேல் ஒப்பந்தத்தை உறுதி செய்யவேண்டுமெனில் ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பங்குதாரராகச் சேர்க்க வலியுறுத்தப்பட்டு இருந்தது என்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது என்று செய்தி வெளியிட்டது. இதனால், ரஃபேல் விவகாரம் மேலும் பரபரப்பு அடைந்தது.
இதற்கிடையே பிரான்ஸ் நாட்டுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரராமன், பிரதமர் மோடி ஆகியோரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறுகையில், ”ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில், அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைக்கப் பிரதமர் மோடி உதவியுள்ளார். மோடி ஒரு ஊழல்வாதி.
ரஃபேல் போர் விமானத்தில் நடந்துள்ள ஊழல்களை மூடி மறைப்பதற்காகத்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இல்லாவிட்டால், பிரான்ஸ் நாட்டுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீரென பயணம் செய்ய காரணம் என்ன?, அதற்கான அவசரம் என்ன இப்போது இருக்கிறது?
உண்மையான நிலவரம் என்னவென்றால், நாட்டின் பிரதமர் ஊழல் செய்துள்ளார். இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி. ஆட்சிக்கு வரும்போது ஊழலை எதிர்த்துப் போரிடுவேன் என்று மோடி பேசினார்,
இன்று அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால், நாட்டின் இளைஞர்களிடம் அவர் குறித்த விவரங்களையும், ஊழலில் ஈடுபட்டுள்ளதையும் நான் கூறுகிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.