முக்கிய செய்திகள்

ரபேல் விமான விவகாரம்-மத்திய அரசு மீது ராகுல் கடும் தாக்கு..


36 ரபேல் போர்விமான கொள்முதல் ஒப்பந்த விவகாரத்தில் 56 இன்ச் மார்புக்காரரின்(மோடி) நண்பருக்காக அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் ரூ. ஒரு லட்சம் கோடி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் ரூ.60 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக ஆளும் மோடி தலைமையிலான அரசு மீது காங்கிரஸ்கட்சி கடுமையாகக் குற்றச்சாட்டு கூறி வருகிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோதுகூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் போர்விமானம் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து கடுமையாக மோடியை விமர்சித்தார்.

போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. இந்த 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல்-10ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு 12 நாட்களுக்கு முன் “ரிலையன்ஸ் டிபென்ஸ்” நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், போர் விமானங்களைத் தயாரிக்க அந்த நிறுவனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

பாதுகாப்புத் துறை மூலமாகவே போர் விமானங்களைத் தயாரிக்கும் உரிமம், “ரிலையன்ஸ் ஏரோஸ்டிரக்ஸர்” நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக எந்தவிதமான நிலமோ அல்லது கட்டிடமோ கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அங்கீகாரம் வழங்கப்பட்ட நாளில் இல்லை.

36 ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்காகக் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு 14 நாட்களுக்கு முன்பாகத்தான் ரிலையன்ஸ் ஏரோஸ்டரக்சர் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக அரசின் மீதும், பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறப்பட்டு இருப்பதாவது:

மத்திய அரசு வாங்க உள்ள 36 ரபேல் போர் விமானங்களைப் பராமரிக்க 56 இஞ்ச் மார்பு வைத்திருப்பவரின்(மோடி) நண்பருக்கு(ரிலையன்ஸ் நிறுவன அதிபர்) நாட்டில் உள்ள அனைத்து வரி செலுத்துவோர் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ரூ. ஒரு லட்சம் கோடி வரி செலுத்த வேண்டும்.

ஆனால், நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரோ வழக்கம் போல், ரபேல் போர் விமானக் கொள்முதலில் எந்தவிதமான ஊழலும் நடக்கவில்லை என்று மறுப்பார். ஆனால், நான் உண்மை என்ன என்பது குறித்து சில விஷயங்களை இணைத்துள்ளேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ரபேல் போர்விமான கொள்முதல் ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்த அறிக்கையை ராகுல் காந்தி இணைத்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடியின் 56 இஞ்ச் மார்பு குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. இந்த 56 இஞ்ச் மார்பைத் துணிச்சலாக பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் வெளிப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியது.