உ.பி.க்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது சம்பவத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சென்றனர். ஆனால் அவர்களை உத்தரப்பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் சாலையில் நடந்து சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தமது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்த முயன்றதில் என்ன தவறு? பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் கூடாதா?
இரு தலைவர்களும் வன்முறையிலா ஈடுபட்டனர்? அல்லது ஆயுதங்களைக் கொண்டு சென்றார்களா? அமைதியான வழியிலேயே தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியது ஏன்? ஏன் இரு தலைவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டும். உத்தரபிரதேச போலீசாருக்கு என்று தனி சட்டம் இருக்கிறதா?
நாட்டின் சட்டங்கள் எதுவும் அவர்களுக்கு பொருந்தாது. இரு தலைவர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்யும் என்கிற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.