முதல்வரை அடிமைப்படுத்துவதுபோல் தமிழக மக்களை அடக்க முடியாது: மதுரையில் ராகுல் காந்தி பேச்சு..

முதல்வரை அடிமைப்படுத்துவதுபோல் தமிழக மக்களை அடக்க முடியாது என்று ராகுல் காந்தி பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் இன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

காலையில் கிருஷ்ணகிரியில் தொடங்கி மாலையில் மதுரையில் அவர் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

காங்கிரஸ் வேட்பாளர்களையும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர் ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

மதுரை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

”தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அடிமைப்படுத்துவது போல் தமிழக மக்களை பிரதமர் மோடியால் அடக்க முடியாது.

2019 தேர்தல் இரண்டு சித்தாந்தகளுக்கு இடையேயான மோதல். காங்கிரஸ் கட்சி இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களும், மொழிகளும், வரலாறுகளும் சமமாக மதிக்கப்பட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழி செய்ய வேண்டும் என்கிறது.

அதிகாரம் மக்கள் கைகளில் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால் மோடி அதிகாரம் ஒற்றை நபரின் கையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்.

நாங்கள் தமிழக மக்களைக் கட்டுப்படுத்த நினைக்கவில்லை. நீட் தேர்வை அவர்கள் மீது திணிக்க விரும்பவில்லை.

எங்கள் தேர்தல் அறிக்கை அனைத்து மக்களின் உணர்வுகளையும் உள்ளடக்கியது. அனிதா எனும் தமிழ்ப் பெண்ணின் தற்கொலை பற்றி எங்களுக்கு சொல்லப்பட்டது. அதனாலேயே நாங்கள் நீட் தேர்வின் முடிவை தமிழகத்தின் கையில் தருகிறோம்.

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் பாஜக பெட்ரோலைக் காலி செய்துவிட்டு, இன்ஜினை ஆன் செய்து சாவியை 15 பணக்காரர்களிடம் கொடுத்துவிட்டார்.

காங்கிரஸ் அரசு, பெட்ரோலை நிரப்பி, சாவியை மக்களிடம் கொடுக்கப்போகிறது. அதன்பிறகு பொருளாதாரம் வளர்ந்து நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியும்.

வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஜிஎஸ்டியை சீரமைப்போம், இளம் தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதை எளிமையாக்குவோம்.

22 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம். பஞ்சாயத்து அளவில் புதிதாக 10 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்குவோம்.

தேர்தல் அறிக்கையில் உள்ள புரட்சிகரமான நியாய் திட்டம் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை மக்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் வழங்கும். அந்தப் பணம் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

பெண்களுக்கு ஆட்சி மன்றங்களில் 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதேபோல் மத்திய அரசுப் பணிகளிலும் 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

காமராஜரைப் பற்றி, பெரியாரைப் பற்றி பாஜகவினருக்குத் தெரியாது. அவர்கள் நாக்பூரில் இருந்து ஆட்சி அதிகாரத்தை செலுத்த முயல்கிறார்கள். தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராவார். எங்கள் கூடடணி தேர்தலுக்கானது மட்டுமல்ல”.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

தேனி,ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி மதுரை வருகை..

பட்டப்படிப்பு விவகாரம் : பாஜக அமைச்சர் ஸ்மிருதி ராணியின் நீண்ட நாள் பொய் அம்பலமானது

Recent Posts