முக்கிய செய்திகள்

காங்கிரசின் கனவுகளைத் தகவமைக்க விரும்பும் ராகுல்?: செம்பரிதி

Rahul change the dreams of Congress? : Chemparithi

__________________________________________________________________________

 

rahul 21.3.14“ஜனநாயகம் தான் சிறந்தது என்பேன். ஏனெனில் மற்ற அனைத்து வடிவங்களுமே மோசமாக இருப்பதால்…”

 

நவீன இந்தியா குறித்த நீண்ட கனவைச் சுமந்த நேருவின் இந்த வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தப் பொலிவும், தத்துவார்த்த வெதுவெதுப்பும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அண்மைக்காலமாக அளித்து வரும் பேட்டிகளில் தெறிக்கத் தொடங்கி இருக்கிறது.

 

புதியதொரு கனவைக் கண்டுபிடித்ததற்கான நம்பிக்கைக் கீற்று அவரது சொல், உடல் மொழிகளில் தொனிக்கிறது.

 

காரணம்…?

 

உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் அகிலேஷூடன் கைகோர்த்ததை, மிகச் சரியான முடிவாக அவர் கருதுவதுதான். இதை அவரது பேச்சில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

 

பாஜக மீதும், மோடி மீதும் அவர் வைத்துவரும் குற்றச்சாட்டுகள் எளிதானவை அல்ல. அவை வெறுமனே ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் புகார்கள் எனக் கூறி புறந்தள்ளிவிட முடியாது.

 

ஆர்எஸ்எஸ் – மோடி கூட்டணி நாட்டை வேறு திசைக்கு அழைத்துச் செல்வதாக அவர் அச்சம் தெரிவிக்கிறார். திட்டக்குழு, ரிசர்வ் வங்கி என, நாட்டின் அனைத்து அடிப்படையான அரசுசார் நிறுவனங்களையும் ஆர்எஸ்எஸ்மயப் படுத்தி வருவதாக அவர் கூறும் குற்றச்சாட்டுகள், நாட்டின் எதிர்காலம் சார்ந்தவை. அவற்றில் உண்மையில்லை என யாரும் மறுத்துவிட முடியாது.

 

நீங்கள் கவனித்திருக்கக் கூடும். அண்மைக்காலமாக மத்திய அரசின் விளம்பரங்களில், நாட்டின் அடையாள நிறமான மூவண்ணப் பின்னணி கூட அதிக அளவில் பளிச்சிடுவதில்லை. காவி நிறமே தூக்கலாகத் தெரிகிறது.

 

இந்தியத் துணைக்கண்டத்தின் எளிய மக்கள் இதற்கா ஆசைப்பட்டார்கள்?

 

மிகச் சரியான நேரத்தில், சரியான புரிதலுடன் ராகுல்காந்தி இந்தக் கேள்விகளை முன்னெடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

 

காங்கிரஸ் மீது பொத்தாம் பொதுவாக முன்வைக்கப்படும் எந்தக் குற்றச்சாட்டுகளையும் ராகுல்காந்தி புறந்தள்ளிவிடவில்லை. அதே நேரத்தில் காங்கிரசில் கருத்துப் பரிமாற்றத்திற்கான வெளியை இதுவரை பாதுகாத்து வருவதை தங்களது பெருமிதத்திற்குரிய அடையாளமாகவே அவர் சுட்டிக்காட்டுகிறார். உண்மைதானே? அதற்கு உதாரணமாக நம் ஊரில் தற்போதைய மாநிலத் தலைவர் திருநாவுக்கரசருக்கும், முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்குமிடையே அவ்வப்போது அரங்கேறி வரும் முட்டல் மோதல்களே வெளிப்படையான சாட்சியாக உள்ளதே!

 

“பாஜகவில் உரையாடல்களே இல்லை. மோடிகளும், அமித்ஷாக்களும் பேசுவதை மட்டுமே மற்றவர்கள் கேட்க வேண்டி இருக்கிறது” என்கிறார் ராகுல்.

 

ஒரு பாதிரியாரின் உத்வேகத்தோடு, மோடி அன்றாடம் ஆற்றி வரும் மேடைச் சொற்பொழிவைக் கேட்பதைத் தவிர, மக்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது. போதாக்குறைக்கு மன்கிபாத் – மனதோடு பேசுவதாகக் கூறி வானொலியில் வேறு அவ்வப் போது உரத்துக் கூவுகிறார். நாட்டின் உண்மை நிலவரத்திற்கும், அவரது பேச்சுக்கும் நிறைய இடைவெளி என்பதை விட, யாதொரு தொடர்பும் இல்லை என்பதே பொருத்தமாக இருக்கும்.

 

நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களையும் நிலை குலைய வைத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கிக்கே 8 மணிநேரத்திற்கு முன்னர்தான் பிரதமர் தெரிவித்திருக்கிறார் என்பதையே, அவரது வடிகட்டிய சர்வாதிகாரப் போக்குக்கு உதாரணமாகவும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டுகிறார்.

 

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தனித்த அடையாளப் பெருமிதம் என்ற முழக்கத்தோடு, நேரு யுகத்தினரால் நிர்மானிக்கப்பட்ட நவீன இந்தியாவை, மீண்டும் புராணிக நிறத்திற்கு மாற்றும் முயற்சியைத் தவிர, ஆர்எஸ்எஸ் – மோடி கூட்டணி அரசின் சிறப்பம்சமாக வேறு எதைக் கூறிவிட முடியும்?

 

எடுத்தோம், கவிழ்த்தோம் என எந்த முடிவையும் எடுப்பதில்லை என்பதுதான் காங்கிரஸ் தலைவர்களின் நிர்வாக அடையாளம். இந்தியாவைப் போன்ற பன்முகச் சமூகம் வாழும் நாட்டில் அத்தகைய போக்கை கடைப்பிடிப்பது, தவிர்க்க முடியாதது மட்டுமின்றி, பல வழிகளில் சரியானதாகவும் தானே இருக்க முடியும்.

 

எந்த ஒரு ஜனநாயக நாட்டின் ஆட்சியாளர்களும், அதன் சமூக, பொருளாதாரம் சார்ந்த அடிப்படைக் கட்டமைப்பு நிறுவனங்களை அத்தனை எளிதில் கலைத்துப் போட்டுவிட மாட்டார்கள். அது ஆரோக்கியமான விளைவுகளையும் ஏற்படுத்தாது.

 

நிதி ஒதுக்கீடுகளை முடிவெடுத்து நிர்வகிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய திட்டக்குழுவைக் கலைத்தது, நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து இணைப்பாகவும், எளிய , நடுத்தர மக்களின் உடனடி பயண வாய்ப்பாகவும் கருதப்படும் ரயில்வே துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை ஒழித்துக் கட்டியது, அதிரடி பணமதிப்பு நீக்கம் போன்ற மோடியின் நடவடிக்கைகள் இந்திய அரசியல் தன்மைக்கு முற்றிலும் முரணானவை மட்டுமல்ல, நேர் எதிரானவை.

 

ராஷ்ட்ரிய சுயம் சேவகர்கள் (ஆர்எஸ்எஸ்), சுய உற்பத்தி சார்ந்த சுதேசிப் பொருளாதாரத்தின் மீது பிடிப்புள்ளவர்கள் என்பது பொதுவான நம்பிக்கை. மோடி பிரதமரானதில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைப் பார்த்தால், அவர்கள் மீதிருந்த அத்தகைய குறைந்த பட்ச நம்பிக்கையும் காணாமல் போய்விட்டது. நாட்டின் பாதுகாப்பு சார்ந்த ராணுவத்துறையில் 49 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருப்பதை அதற்கு வெளிப்படையான, பிரம்மாண்டமான உதாரணமாக கூறலாம்.

 

மத அடிப்படையில், ஆர்எஸ்எஸ், பாஜகவின் கொள்கை என்ன என்பது அனைவரும் அறிந்ததே. குஜராத்தில் மோடி ஆட்சி புரிந்த காலத்தில், பாலாறும், தேனாறும் கரைபுரண்டதாகவும், நாடு முழுவதும் அத்தகைய பாலையும், தேனையும் பெருக்கெடுக்கச் செய்யும் வல்லமை மோடிக்கு மட்டுமே உள்ளதென்றும், அரசியல் தரகர்களின் உதவியுடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் பரப்புரையால், ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு வசப்பட்டு விட்டது. விளைவுகளை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்தநிலையில்தான், ஆர்எஸ்எஸ்ஸூக்கும், மோடிக்கும் எதிராக தனது எதிர்ப்புக் குரலை உரத்து எழுப்பத் தொடங்கினார் ராகுல்காந்தி. இங்கே காங்கிரஸ் எனக் கூறாமல், ராகுல்காந்தி எனக் குறிப்பிடக் காரணம் இருக்கிறது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஆர்எஸ்எஸ்ஸை வெளிப்படையாக எதிர்த்துப் பேசத் தயங்கும் நிலையில்,  முக்கியப் பொறுப்பில் இருக்கும் ராகுல் காந்தி அதனைத் தயங்காமல், அடிக்கடி செய்தார். செய்து வருகிறார். இதேபோல் ஆர்எஸ்எஸ்சை வெளிப்படையாக அவ்வப்போது எதிர்த்துவரும் மற்றொரு காங்கிரஸ்காரர் ப.சிதம்பரம்.

 

காங்கிரஸ் மீதான நமது விமர்சனங்கள் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால், நாட்டை காவிமயப்படுத்தும் மோடித்துவத்தை எதிர்த்து நிற்க வலிமையானதொரு அரசியல் பின்னணியும், அதன் அடிப்படையிலான எழுச்சியும் வேண்டாமா?

 

அந்த அடிப்படையில், காங்கிரசையும், ராகுலையும் விட்டால் நாடுதழுவிய மதச்சார்பற்ற அரசியல் குறியீடாக தற்போது யாரையும் கொண்டாட வாய்ப்பில்லை.

 

காங்கிரஸ் தனது கொள்கைகளை அவ்வப்போது, மறு ஆய்வு செய்து புதுப்பித்துக் கொள்வதுடன், கூர்தீட்டிக் கொள்ளவும் தயங்காது என்ற விசாலமான தொலைநோக்குப் பார்வையும் ராகுலிடம் இருப்பதை நாம் அவரது பேச்சிலும், அணுகுமுறையிலும் பார்க்க முடிகிறது.

 

ஆம்; காங்கிரசின் பழைய கனவுகளைத் தகவமைக்க விரும்புகிறார் ராகுல்.

 

நேருவின் சொல் வளமும், இந்திராகாந்தியின் குரல் வளமும் ராகுல்காந்தியிடத்தே இல்லாமல் போகலாம். மூன்று தலைமுறையாக வந்த சிந்தனை வளமும், கருத்து வளமும் அவருக்குள் இறங்காமல் எப்படிப் போய்விடும்.

 

இந்தியா என்ற நாடு, அதன் கருவாக்கத்தில் இருந்த படியே, பன்முகச் சமூகங்கள் வாழ்வதற்கான நாகரிகம் மிக்க தொட்டிலாக தொடர வேண்டும் என்ற கருத்து நேர்மை உள்ளவர்கள், ராகுலையும், காங்கிரசையும் ஆதரிக்க இனியும் தயங்க வேண்டியதில்லை.

 

அம்மாஞ்சி என்றும், அரசியல் அனுபவமற்றவர் என்றும் சிலர் ராகுலை எள்ளி நகையாடுவதன் பின்னணியில் பொதிந்துள்ள அபாயத்தை கவனிக்கத் தவறிவிடக் கூடாது.

 

அந்த அடிப்படையில், உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் அகிலேஷூம், ராகுலும் கைகோர்த்திருப்பது, சந்தேகத்திற்கு இடமில்லாமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தததே!

 

மதச்சார்பின்மையை கைவிடாத காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் தலைமையும், பிற்பட்ட மக்களின் பிரதிநிதியாக களமாடும் சமாஜ்வாதிக் கட்சியின் அடுத்த தலைமுறைத் தலைவரும், இணைந்திருப்பது, எதார்த்தமாக நடந்தேறி இருக்கும் அரசியல் நன்மைகளில் ஒன்று. 

 

மதச்சார்பின்மையைக் காக்க நினைக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும், தற்போது காங்கிரசையும், அதன் தோழமை சக்திகளையும் ஆதரிக்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இனியும், அதற்கு தாமதமோ, தயக்கமோ தேவையில்லை. காரணம், காங்கிரசின் குழப்பம் நாம் அறிந்ததுதான். ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் அபாயம், நாம் உணர்ந்திருப்பதையும் விட ஆழமானது. வீரியமானது.

 

______________________________________________________________________