மத்தியப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு அந்தக் கட்சியின் அகங்காரம், மோசமான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விளாசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், முங்கோலி, கொலாராஸ் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டத்தில் இரு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திர சிங் யாதவ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேவந்திர ஜெயினைக் காட்டிலும் 8 ஆயிரத்து 86 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திர சிங் 82,523 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் தேவேந்திர ஜெயின் 74,437 வாக்குகளையும் பெற்றனர்.
இதேபோல முன்கோலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பாய் சாகப் யாதவை 2 ஆயிரத்து 124 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரிஜேந்திர சிங்யாதவ் தோற்கடித்தார். பிரிஜேந்திர சிங் 70 ஆயிரத்து 808 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பாய் சாகப் யாதவ் 70ஆயிரத்து 808 வாக்குகளையும் பெற்றனர்.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், ஆல்வாரில் நடந்த இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த மாநிலங்களிலும் பாஜக ஆளும் கட்சியாக இருந்தநிலையிலும், மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்திருப்பது ஆளும் கட்சியின் மீது அதிருப்தி வளர்ந்து வருவதையே காட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வெற்றி குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், ”மத்தியப் பிரதேச இடைத் தேர்தலில் ஆளும் பாஜக தனது 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது, அந்தக் கட்சியின் அகங்காரத்தையும், மோசமான நிர்வாகத்தையும் காட்டுகிறது. முதலில் ராஜஸ்தானில் அந்தக் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இப்போது மத்தியப் பிரதேசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முன் ராஜஸ்தானின் ஆல்வார், அஜ்மீரிலும் பாஜக தோல்விஅடைந்தது. அங்கு காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட்டது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் ஜோதிர்தியா சிந்தியா கூறுகையில், ”என் ஆழ்மனதில் இருந்து ராஜஸ்தானின் முங்கோலி, கொலாராஸ் தொகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த வெற்றிக்கு உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இது மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் கிடைத்த வெற்றியாகும், பணத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.