முக்கிய செய்திகள்

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்பு..


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் நடைபெற்றன. இதையொட்டி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அவருக்கு ஆதரவாக மேலும் 89 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ராகுல் காந்தியை தவிர மற்ற யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், ராகுல் காந்தி போட்டியின்றி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிகாரப்பூர்வமாக ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தேர்தல் விதிமுறைப்படி இன்றுதான் தலைவராக பதவி ஏற்க இருக்கிறார்.

ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி ஏற்ப இருப்பதையொட்டி இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் டெல்லி அக்பர் சாலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கூடினர்.

அவர்கள் ராகுல் பதவி ஏற்பதை வரவேற்கும் வகையில பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், ராகுலை வாழ்த்தி கோஷம் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.