என் கண்ணைப் பார்த்து பேச முடியாத பிரதமர் மோடி: ராகுல் சுரீர்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இதனிடையே தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதா தள கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதேசமயம் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. தொடர்ந்து அவையில் ஒவ்வொரு எம்.பி.க்களாக தங்களது கருத்தை பதிவு செய்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக மத்திய அரசை விமர்சித்து பேசினார்.

 

ராகுல்காந்தி பேசும்போது,

 

ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சத்தை டெபாசிட் செய்வதாக கூறினீர்கள். ஆனால் இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றீர்கள். ஆனால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியும் நிறைவேறவில்லை. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுவிட்டு திரும்பிய பின், ரஃபேல் விமானத்தின் விலை உயர்ந்துள்ளது. 

 

தொழில் அதிபர்களுக்கு மட்டும் பிரதமர் மோடி சலுகை அளித்து வருவது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். நான் புன்முறுவலோடு பிரதமரை பார்க்கிறேன். ஆனால் அவர் பதற்றம் காரணமாக என்னை பார்க்க மறுக்கிறார். அம்பானியின் ஜியோ நிறுவன விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் பயன்படுத்தப்படுகிறது. கோட் சூட் போட்டவர்களுக்கான அரசாக மத்திய அரசு உள்ளது. பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்து பேசுகிறார். மறுநாள் சீன ராணுவம் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறது என பலமுறை காரசாரமாக பேசினார்.

 

மத்திய அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி முன்வைத்த போது பாஜக எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அதேசமயம் ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல்காந்தி பேசும்போது, நிர்மலா சீதாராமன் குறுக்கிட்டு பேசினார். 

 

என் கண்ணைப்பார்த்து பிரதமர் பேசவேண்டும்; ஆனால் அதை தவிர்க்கிறார் பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது.  பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும்  என  ராகுல்காந்தி கூறினார்.  

 

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள்.  சிறுபான்மையினரும் பழங்குடியினரும் நாட்டின் அங்கத்தினர் இல்லையவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்