ராகுல் ‘கோகைன்’ போதை மருந்து பயன்படுத்துகிறார்: சு.சுவாமி குற்றச்சாட்டு..


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘கோகைன்’ போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார், அவரிடம் போதைமருந்து தடுப்பு பரிசோதனை நடத்தினால் அதில் தோல்வி அடைந்துவிடுவார் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பாஜக ஆட்சியில் போதை மருந்து புழக்கமும், இளைஞர்களிடத்தில் போதை மருந்து பழக்கமும் அதிகரித்தது என்று ஆளும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

பஞ்சாபில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்த போது இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். அப்போது, அவர் கூறுகையில் பஞ்சாப் மாநிலத்தில் 70 சதவீதம் பேர் போதைமருந்து பழக்கம் உடையவர்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தற்போதைய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘பஞ்சாப் மாநிலத்தில் போதைமருந்து பழக்கத்தை ஒழிக்கும் வகையில் போதை மருந்து கடத்துபவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும்.

இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடந்த புதன்கிழமை கடிதம் எழுதி இருக்கிறேன். அரசு அதிகாரிகள், போலீஸார் அனைவரையும் பணிக்கு தேர்வு செய்யும் முன், அவர்களுக்குப் போதை மருந்து தடுப்பு பரிசோதனை செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

இதை வரவேற்ற பாஜக, ஆம் ஆத்மி கட்சியினர் ‘‘போலீஸார், அரசு அதிகாரிகளுக்கு மட்டும் ஏன் போதைமருந்து தடுப்பு பரிசோதனை நடத்த வேண்டும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் இதேப்போன்று பரிசோதனை நடத்த வேண்டும். அவ்வாறு யாரேனும் போதைமருந்துக்கு அடிமையான அமைச்சர்கள் இருந்தால், அவர்கள் போதை மருந்து கடத்தலை ஊக்கப்படுத்துபவர்களாக இருப்பார்கள்’’ என்று வலியுறுத்தினார்கள்.

இதை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் கூறுகையில், ‘‘மாநிலத்தில் போதைமருந்து கடத்தலையும், பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த எந்தச் சவாலையும் ஏற்கத் தயார். இந்தப் பரிசோதனையை எதிர்கொள்ள எங்கள் அமைச்சர்களுக்கும், எனக்கும் எந்தவிதமான தயக்கமும் இல்லை’’ எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர், மறைமுகமாக நேற்று ராகுல் காந்தியை சாடினார். அவர் கூறுகையில், ‘‘பஞ்சாபில் உள்ள 70 சதவீத மக்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் என்று யார் கூறினார்களோ அவர்களும் போதைமருந்துக்கு அடிமையானவர்கள்தான். அவர்களும் போதைமருந்து தடுப்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’’ என்று குற்றம்சாட்டி இருந்தார்.

மத்தியஅமைச்சர் ஹர்சிம்ரத் கருத்தை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றிருந்தார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் ஹர்சிம்ரத் கருத்தை ஆதரிக்கிறேன். அவர் வேறுயாரையும் கூறவில்லை, 70 சதவீதம் பஞ்சாபிகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் எனக் கூறியது ராகுல் காந்திதான்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் உடையவர். இதை உறுதியாகக் கூறுகிறேன். குறிப்பாக கோக்கைன் பயன்படுத்தக்கூடியவர். அவரிடம் போதைப்பொருட்கள் தடுப்பு பரிசோதனை செய்தால், அதில் நிச்சயம் ராகுல் காந்தி தோல்வி அடைந்துவிடுவார்’’ எனத் தெரிவித்தார்.